சென்னை: தேர்தல் வாக்குறுதிப்படி, விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் மாநிலக்குழு சார்பில், சென்னை கீழ்ப்பாக்கம் மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் முன்பு தொடர் முழக்க போராட்டம் நேற்று நடைபெற்றது.
போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் (சிபிஐ) பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் (சிபிஎம்) மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் மாநிலக் குழு நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன் ரூ.2,044.46 கோடிதள்ளுபடி செய்யப்படுவதாக வெளியான அரசின் முதல்கட்ட அறிவிப்பில், ஒரு பகுதி விவசாயிகள் மட்டும் பலன் பெறுவர்.
பெரும்பகுதி விவசாயிகளுக்கு தேர்தல் வாக்குறுதிப்படி கடன் தள்ளுபடி அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, மே 26-ல் எங்கள் சங்கங்களின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
ஜூன் 2-ல் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து, கடன் தள்ளுபடி செய்ய மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம். அதனடிப்படையில், ஜூன் 16-ம் தேதி மாநில அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டது.
அதில் ரூ.75 ஆயிரம் வரை பயிர்க் கடன் பெற்றுள்ளவர்களுக்கு முழுத் தள்ளுபடியும், அதற்கு மேல் கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை விட ஒரு சிறிய முன்னேற்றமே தவிர, முழுமையான தள்ளுபடியாக அமையவில்லை.
எனவே, தேர்தல் வாக்குறுதிப்படி 5 ஏக்கர் வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளின் கடனை முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் பயிர்க் கடன் பெற்ற விவசாயிகளின் கடனில் 50 சதவீதமும் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

More Stories
“ஒன்றிய அரசோடு கண்மூடித்தன மோதலை விரும்பவில்லை” – பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு: திமுக வெளிநடப்பு
திமுக ஆட்சியில் ஊழல்.. ரூ 3.3 லட்சம் கோடி முதலீடுகள் வெளியேறின – அமைச்சர் கீர்த்தனா