சென்னை: மணலி, எண்ணூர் பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை தொழிற்சாலைகள், தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இதனால் இப்பகுதி வழியாக செல்லும் கொசஸ்தலையாறு, எண்ணூர் கழிமுக பகுதிகள் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.
கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க பகுதியாக விளங்கும் எண்ணூர் கழிமுகம், கொசஸ்தலையாறு பகுதிகளில் கடல்வாழ் உயிரினங்கள் முற்றாக அழிந்து, சுற்றுச்சூழல் கெடும் நிலை ஏற்பட்டிருப்பதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் நேற்று எண்ணூர் கழிமுகத்துக்கு அருகே கொசஸ்தலையாற்றில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்தன.
தொழிற்சாலை ரசாயன கழிவுகள் ஆற்றில் கலந்ததால் தான் மீன்கள் இறந்திருக்கும் என மீனவர்கள் குற்றம்சாட்டினர். எண்ணூர் பகுதி மீனவர்கள் எண்ணூர்- தாழங்குப்பம் விரைவு சாலையில், இறந்த மீன்களை சாலையில் கொட்டி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து மீனவர்கள் கூறும்போது, “எங்களின் வாழ்வாதாரமே இந்த கொசஸ்தலையாறும், எண்ணூர் கழிமுகமும் தான்.
இப்பகுதியில் மீன்கள் இறப்புக்கு இப்பகுதியை சுற்றியுள்ள தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகள் தான் காரணம். எனவே கொசஸ்தலையாறு மாசடையும்
பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும். வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
விதிமீறரில் ஈடுபட்ட தொழிற்சாலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். இதற்கிடையில் மாசுக்கட்டுப்பாடு வாரியம், மீன்வளத்துறை அதிகாரிகள் நேற்று, மீன்கள் இறந்து கிடந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மீன் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். முதற்கட்ட ஆய்வறிக்கை அரசிடம் சமர்ப்பித்துள்ளனர்.
இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறும்போது, “மீன்கள் இறந்த பகுதியில் எண்ணெய் கசிவு அல்லது தொழிற்சாலை கழிவுகள் ஆற்றில் கலந்ததற்கான அறிகுறிகள் கண்டறியப்படவில்லை.
இறந்த மீன் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில், முடிவுகள் வந்த பிறகே, மீன்கள் இறப்புக்கான காரணம் தெரியவரும்” என்றனர்.
இது குறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், “ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களை அகற்றி அப்பகுதியில் தொற்று நோய் பரவாமல் தடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில், “பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடி நிவாரணத்துடன்,உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

More Stories
“கோவை மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதமே காரணம்” – பேரவையில் நிர்மல் குமார் விளக்கம்
“கம்யூனிஸ்டுகளின் ரத்தம், வியர்வையால் விளைந்ததே இந்திய சுதந்திரம்” – டி.ராஜா
“புதுச்சேரியில் தனி நபர் வருமானம் ரூ.3.06 லட்சமாக உயர்வு” – முதல்வர் ரங்கசாமி பெருமிதம்