சென்னை: தவெக ஆதரவுடன் மாநிலங்களவை எம்.பி.யாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தான் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், “தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணியின் (தவெக, காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், சிபிஐ, சிபிஎம்) முதல் எம்.பி. வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும், பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன்”. என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் இனி இது தான் என பரவலாக பேசப்பட்ட நிலையில், இந்த கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பெயர்களை சேர்த்தது தவறு என அக்கட்சிகளின் மாநில செயலாளர்கள், பிரவீன் சக்கரவர்த்திக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்திகளில் கூறியிருப்பதாவது:
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: பிரவீன் சக்கரவர்த்தி, ‘தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி’யில் இடம் பெற்றுள்ளது போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரையும் குறிப்பிட்டிருப்பது தவறானது. இத்தகைய கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை நாடவில்லை.
சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களை தவெக பெற்ற நிலையில், ஆளுநர் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் தவெகவுக்கு ஆதரவு அளித்தோம். பிரவீன் சக்கரவர்த்தி குறிப்பிட்டுள்ளது போன்ற ஓர் கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்து கொள்கிறோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரையும் பிரவீன் சக்கரவர்த்தி குறிப்பிட்டிருப்பது தவறானது.
கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கெனவே தெளிவாக கூறிவிட்டோம். பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவை அதிக பிரசங்கித்தனம் என்று தான் சொல்ல வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

More Stories
வானிலை முன்னறிவிப்பு: கோவை, மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
பெரம்பலூரில் டிராக்டர் மீது அரசுப் பேருந்து மோதி 5 வயது சிறுமி உயிரிழப்பு: 9 பேர் காயம்
கோவையில் மாவட்ட, மண்டல் தலைவர்கள் உட்பட அண்ணாமலை ஆதரவாளர்கள் பாஜகவில் இருந்து விலகல்