July 17, 2026

“சோனம் வாங்சுக் உடன் மத்திய அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” – சீமான்

சென்னை: ‘நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சோனம் வாங்சுக்குடன் உடனே பேச்சுவார்த்தை நடத்தி அவரது உடல் நலனை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில், கடந்த 18 நாட்களுக்கும் மேலாக உணவு உட்கொள்ளாமல் தனது உடலை வருத்தி, சாவின் விளிம்பில் நின்று அறப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் லடாக் மண்ணின் கல்விப் புரட்சியாளரும், சூழலியல் அறிஞருமான சோனம் வாங்சுக்.

ஒரு நாட்டின் எதிர்காலமாகத் திகழக்கூடிய கோடிக்கணக்கான ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பத்து மாணவர்களின் கல்வி உரிமையைக் காப்பதற்காக, தன்னுயிரைத் துச்சமென மதித்து அவர் மேற்கொண்டு வரும் இந்த உண்ணாநிலை அறப்போர், ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தின் ஆன்மாவையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த நாட்டின் ஆளும் வர்க்கமோ எவ்வித சலனமும் இன்றி, ஒரு மனிதனின் உயிர் போகும் நிலையைக் கண்டும் காணாமல் மவுனம் சாதிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த இந்த ‘நீட்’ போன்ற ஒற்றைச் சாளரத் தேர்வு முறையானது, தகுதி, திறமை என்ற பெயரால் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் ஒரு பெரும் பகற்கொள்ளை என்பதை நாம் தொடக்கம் முதலே எச்சரித்து வருகிறோம். இந்த ஆண்டு அரங்கேறிய வினாத்தாள் வெளியீடுகளும், முறைகேடுகளும் நமது எச்சரிக்கையை முற்றிலும் உண்மையாக்கியுள்ளன.

மாதக்கணக்கில், ஆண்டுகணக்கில் தூக்கத்தைத் தொலைத்து, படித்த லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் ஒரு மாபெரும் கல்விச் சந்தையாக இந்தத் தேர்வு வாரியம் மாறியிருக்கிறது. இது வெறும் நிர்வாகத் தோல்வி அல்ல, இந்த நாட்டின் ஒட்டுமொத்தக் கல்வி அமைப்பின் மீதும், எதிர்காலத் தலைமுறையின் மீதும் நடத்தப்பட்ட ஒரு வன்முறை.

இந்த அநீதிக்கு எதிராகவும், வினாத்தாள் வெளியீட்டிற்குப் பொறுப்பேற்று ஒன்றிய பாசக அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும்தான், டெல்லியில் போராடும் இளம்தலைமுறையினரோடு கைகோர்த்து சோனம் வாங்சுக் களம் கண்டுள்ளார்.

18 நாட்களைக் கடந்த உண்ணாநிலையின் காரணமாக அவரது உடல் எடை 9 கிலோவுக்கும் மேல் குறைந்து, தசை இழப்பு ஏற்பட்டு, இதயம் பலவீனமடைந்து கவலைக்குரிய நிலையில் உள்ளார்.

சோனம் வாங்சுக் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட ‘3 இடியட்ஸ்’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, “கல்வி என்பது மனப்பாடம் செய்வதல்ல, அது சிந்தனையைத் தூண்டுவது” என்று கைதட்டி ரசித்த இந்த நாடு, உண்மை வாழ்க்கையில் அதே சிந்தனைக்காக ஒரு மாமனிதன் சாவின் விளிம்பில் போராடும்போது, தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்றிக் கொண்டு வேடிக்கைப் பார்ப்பது பெரும் அவமானம்.

அதே படத்தின் தமிழாக்கத்தில் நடித்து வெற்றிகண்ட முதல்வர் விஜய், பாஜக அரசின் கொடுங்கோன்மைக் குறித்து அமைதி காப்பதும், சோனம் வாங்சுக் குறித்து குரல் எழுப்பாததும் பெரும் வருத்தமளிக்கிறது.

ஒன்றிய அரசு இனியும் காலங்கடத்தாமல், ஜந்தர் மந்தரில் போராடி வரும் சோனம் வாங்சுக் மற்றும் மாணவர் பிரதிநிதிகளுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நீட் போன்ற ஆதிக்கத் தேர்வு முறைகளை முற்றிலும் கைவிட்டு, வினாத்தாள் வெளியீட்டிற்குக் காரணமானவர்கள் மீதும், அதற்குப் பொறுப்பான கல்வி அமைச்சகத்தின் மீதும் கடுமையான சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.

கல்வி என்பது வர்த்தகப் பண்டமல்ல அது எளிய மக்களின் வாழ்வாதார உரிமை. உண்ணாநிலை போராட்ட முறையை கைவிட வேண்டும் எனும் கோரிக்கையோடு நம் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் காக்கப் பாடுபடும் சோனம் வாங்சுக் அவர்களின் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவை வழங்குகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

Spread the love