April 9, 2026

“ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை உடைக்க ஒரு ‘பி’ டீமை ஸ்டாலின் உருவாக்கினார்” – இபிஎஸ்

சென்னை: “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை உடைக்கலாம், முடக்கலாம் என்று நினைத்து ஒரு ’பி’ டீமை உருவாக்கி நீங்கள் (மு.க.ஸ்டாலின்) சதித் திட்டம் தீட்டினீர்கள். அத்தனையையும் நாங்கள் முறியடித்தோம்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது: “இந்த தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல். வாரிசு அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல். சீர்காழியில் இபிஎஸ்ஸை துடைத்து எறிய வேண்டும் என்று பேசி இருக்கிறார். அதிமுக என்பது 2 கோடி தொண்டர்கள் நிறைந்த கட்சி.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை உடைக்கலாம், முடக்கலாம் என்று நினைத்து ஒரு ’பி’ டீமை உருவாக்கி நீங்கள் சதித் திட்டம் தீட்டினீர்கள். அத்தனையையும் நாங்கள் முறியடித்தோம். எத்தனை வழக்குகள்? இப்போது பி டீம் எங்கு போனார்கள்? குப்பைக்கு போய் விட்டார்கள். அதுதான் சரியான வார்த்தை.

அவருக்கு என்ன அடையாளம் கொடுத்தோம், எவ்வளவு பொறுப்பை ஜெயலலிதா கொடுத்தார். அதை எல்லாம் மறந்து சுயநலவாதியாகிவிட்டார். அப்படிப்பட்ட துரோகிகள் எல்லாம் அதிமுகவில் இருந்து துடைத்து எறியப்பட்டார்கள். இப்போது அதிமுக புனிதமாக இருக்கிறது.

கட்சிக்குள் யார் யாரெல்லாம் குடைச்சல் கொடுத்தார்களோ, அத்தனையும் இன்று ஆண்டவன் அருளாலும், இரு பெரும் தலைவர்களின் அருளாலும் துடைத்து எறிந்து விட்டோம். அதிமுக மேலும் ஜெட் வேகத்தில் சென்றுகொண்டு இருக்கிறது. திமுக கூட்டணி தொடங்கி காங்கிரஸ், திமுக 20 நாட்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். இவர்களை மாற்றி அவர்களும், அவர்களை மாற்றி இவர்களும் குறை பேசிக்கொண்டிருந்தார்கள். அதிமுக அப்படியா இருந்தது?

திமுக தேர்தல் அறிக்கையை அதிமுக காப்பி அடித்தது என்று ஸ்டாலின் பேசுகிறார். யார் முதலில் தேர்தல் அறிக்கையை வெயிட்டது? அப்படியென்றால் யார் காப்பி அடித்திருப்பார்கள்? நாம் தேர்தல் அறிக்கை வெளியிட்டு 10 நாட்களுக்குப் பிறகு தான் திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. நமது தேர்தல் அறிக்கையை திமுகதான் காப்பி அடித்தது. அதை அப்படியே உருட்டிப் பேசுகிறார் ஸ்டாலின்.

அதிமுக அரசை விட இன்று திமுக ஆட்சியில் கூடுதலாக ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி கூடுதல் வருமானம் வருகிறது. கடன் 5 லட்சம் கோடி வாங்கி இருக்கிறீர்கள் பெரிய திட்டம் ஏதும் இல்லை. என்ன திட்டம் செய்தீர்கள்? அதிமுக ஆட்சியில் சென்னை மக்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, மெட்ரோ 2-ம் கட்டம் திட்டம் கொண்டு வந்தோம்.

63 ஆயிரம் கோடிக்கு அனுமதி வாங்கி, மத்திய அமைச்சரை அழைத்து வந்து கலைவாணர் அரங்கில் அடிக்கல் நாட்டிய பெரும் அதிமுகவை சேரும். இந்தியாவிலேயே ஒரு திட்டத்திற்கு 63 ஆயிரம் கோடி நிதியை பெற்ற அரசு அதிமுக அரசு. உங்களால் இப்படி ஒரு திட்டத்தை பெற முடிந்ததா..?

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தரமான பொருட்கள் அம்மா உணவகத்திற்கு கொடுக்கப்பட்டு, மக்களுக்கு ருசியான உணவு கொடுக்கப்படும். தரமான அம்மா உணவுகத்தில் குறைந்த விலையில் உணவு கொடுப்போம். மூடப்பட்ட அம்மா உணவகங்கள் அத்தனையும் திறக்கப்படும். நானே நேரடியாக கண்காணிப்பேன்.

மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை, பெண்கள், மூதாட்டிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை, 2 வயது சிறுமிகளுக்கு கூட இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. 5 ஆண்டுகளில் 6999 போக்சோ வழக்குகள், 18 ஆயிரம் பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஆட்சி தேவையா?

எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை, கிராமம் முதல் நகரம் வரை பட்டிதொட்டி எங்கும் கஞ்சா விற்பனை. கஞ்சா போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை திருட்டு நடக்காத நாளே இல்லை. ஏன் என்றால் அதை விற்பதே திமுக நிர்வாகிகள் என்று தான் சொல்கிறார்கள். அதனால் தான் இந்த கஞ்சாவை கட்டுப்படுத்த முடியவில்லை. அதிமுக ஆட்சி அமைந்த பின் மூன்றே மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் கஞ்சா விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும். சட்டத்தின் ஆட்சி் நடக்கும்.

திமுக ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள். அதை யார் கட்டுவது, நீங்கள் தான் கட்டவேண்டும். இந்த ஆட்சியின் சாதனை நம்மை எல்லாம் கடன்காரர்களாக்கியது மட்டும்தான். அதிமுக ஆட்சியில் இருந்ததை விட திமுக ஆட்சியில் வருமானம் கூடுதலாக இருந்தும் ஏன் கடன் வாங்குனீர்கள்? அதெல்லாம் எங்கு போய் சேரணுமோ, பணம் அங்கு போய் சேர்ந்து விட்டது. இதை எல்லாம் அதிமுக அரசு வந்ததும் தோண்டியெடுத்து மக்களிடம் தெளிவுபடுத்துவோம்.

திமுக ஆட்சிக்கு வந்து ஐந்தரை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாக சொன்னார்கள், காலி பணியிடங்களை இது வரை நிரப்பினார்களா என்று பார்த்தால் 94 ஆயிரம் பேர் தான் நிரப்பி இருக்கிறார்கள். 5 ஆண்டுகளில் பணி ஒய்வு பெற்றவர்கள் 1 லட்சம் பேர். ஆனால், பணி நியமனம் 94 ஆயிரம். அதிலும் 6 ஆயிரம் பாக்கி. அப்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா…?

நீட் தேர்வு ரத்து என்றார்களே செய்தார்களா? தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றினார்களா..? மாதம்தோறும் கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் கொடுத்தார்களா..? பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என்றார்கள், குறைத்தார்களா..? கல்விக்கடன் மாணவர்களுக்கு ரத்து செய்தார்களா…? ஒன்றும் செய்யவில்லை.

மக்களை ஏமாற்றி புதிதாக ஒரு அறிவிப்பு. கூப்பன் கொடுப்பார்களாம், கூப்பன் யார் கொடுப்பார்கள்? திமுக ஆட்சிக்கு வருவது 100 சதவீதம் முடியாது. ஆனால் அந்த அறிவிப்பில் கூட திமுக குடும்பத்திற்கு என்ன வருமானம் என பார்த்து தான் அறிவிப்பு கொடுத்திருக்கிறார். கூப்பன் கொடுத்தால்தானே கமிஷன் கிடைக்கும். நேரடியாக வங்கிக்கு அனுப்பினால் கிடைக்குமா…?’’ என்று பழனிசாமி பேசினார்.

Spread the love