புதுடெல்லி: வங்கதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு அரசுக்கு எதிராக மாணவர் அமைப்புகள் நடத்திய போராட்டம் தீவிரமடைந்தது இதனால் 2024 ஆகஸ்ட் 5-ம் தேதி அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் வங்கதேசத்தின் பொருளாதாரம் வலுவாக இருந்தது. குறிப்பாக அந்த நாட்டின் ஜவுளி ஏற்றுமதி செழித்தோங்கி வளர்ந்தது. ஆனால் முகமது யூனுஸ் மற்றும் தற்போதைய பிரதமர் தாரிக் ரஹ்மான் ஆட்சியில் அந்த நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. வங்கதேசம் முழுவதும் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகள் மூடப்பட்டு உள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
இதை எதிர்த்து கடந்த சில வாரங்களாக வங்கதேச ஜவுளி தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டு பெரும் கலவரம் வெடித்திருக்கிறது. இந்த கலவரத்தின் பின்னணியில் ஷேக் ஹசீனா இருப்பதாக வங்கதேச அரசு பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளது.
இந்த சூழலில் பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் வசிக்கும் ஹசீனாவின் செய்தித் தொடர்பாளர் சையது முகமது அலி தனியார் செய்தி நிறுவனத்துக்கு நேற்று அளித்த பேட்டியில், “2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி வங்கதேச அரசுக்கு சொந்தமான விமானத்தில் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு சென்றார். வரும் டிசம்பர் 16-ம் தேதி அவர் மீண்டும் வங்கதேசத்துக்கு திரும்ப விரும்புகிறார். அவரது போக்குவரத்துக்கு வங்கதேச அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
வங்கதேச அரசு எச்சரிக்கை
வங்கதேச வெளியுறவு அமைச்சர் ஹிமாயூன் கபீர், டாக்காவில் நேற்று கூறும்போது, “கடந்த 2024-ம் ஆண்டு கலவர வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு வங்கதேச நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. அவர் ஒரு குற்றவாளி. குற்றவாளிகள் ஒப்படைப்பு நடைமுறையின் மூலம் மட்டுமே அவர் வங்கதேசத்துக்கு திரும்ப முடியும். அவரை கைது செய்து கைவிலங்கிட்டு அழைத்து வர ஏற்பாடு செய்வோம்” என்று தெரிவித்தார்.

More Stories
கொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு வாபஸ்: சோனியா, ராகுல் குற்றச்சாட்டு
100 நாள் ஆகியும் முடித்து வைக்கப்படாத நாடாளுமன்ற கூட்டத்தொடர்: தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவு திரட்டும் மத்திய அரசு
விடுதலைப் புலிகள் மறுசீரமைப்பு சதி வழக்கு: அப்ரூவராக மாறிய இலங்கை நபருக்கு ஜாமீன்