September 7, 2026

தனியாளாக ஆற்றை சுத்தப்படுத்திய பிட்டு தபாஹிக்கு சர்வதேச அங்கீகாரம்!

போபால்: மத்திய பிரதேச மாநிலம் பியோரா நகரைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவர் சுரேந்திர சிங் சவுத்ரி (பிட்டு தபாஹி). இவர் பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடைந்திருந்த, பியோரா நகரில் ஓடும் அஜ்னார் ஆற்றை தனி ஆளாக சுத்தம் செய்ய தொடங்கினார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் தினமும் ஆற்றில் இறங்கி பிளாஸ்டிக் கழிவுகள், பாசிகள் மற்றும் ரசாயனக் கழிவுகளை அகற்றினார். தூய்மைப் பணிகளுக்கு முன்பும், பின்பும் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர, அது வைரலாக பரவியது. மேலும் ஆற்றை சுத்தப்படுத்தும் பிட்டுவின் முயற்சிக்கு ஆதரவு பெருகியது.

இந்நிலையில், நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ‘ஓஷன் கிளீனப்’ என்கிற சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி போயன் ஸ்லாட், தங்களது அமைப்பில் இணைந்து பணியாற்ற பிட்டுவுக்கு இன்ஸ்டாகிராமில் அழைப்பு விடுத்துள்ளார்.

‘ஓஷன் கிளீனப்’ உலகின் பெருங்கடல்கள் மற்றும் ஆறுகளில் உள்ள நெகிழி மாசுபாட்டை அகற்றுவதற்காக, மேம்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்கி விரிவுபடுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயல்படும் லாப நோக்கமற்ற அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love