பிரேமலதா விஜயகாந்த்
விருதாச்சலம்: “தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை பீக்கில் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஏற்கெனவே இருந்த திட்டங்களை சரியாக செயல்படுத்தினாலே, மக்கள் அனைத்தையும் பெற முடியும்,” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தேர்தல் கால பிரச்சாரத்தைப் போல் இல்லாமல், ஆக்கப்பூர்வமாக முதல்வர் விஜய் செயல்பட வேண்டும். பெண்கள், விவசாயிகளுக்கு பிரச்சினை, குறிப்பாக, தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை பீக்கில் சென்று கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் ஏற்கெனவே இருந்த திட்டங்களை சரியாக செயல்படுத்தினாலே, தமிழக மக்கள் அனைத்தையும் பெற முடியும். விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் எனச் சொன்னார்கள். ஆனால் விவசாயிகள் யாராவது மகிழ்ச்சியாக இருக்கின்றார்களா?
தமிழகத்தின் நிதி நிலையை பார்த்துவிட்டு தான் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே தர வேண்டும். ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் இதைப் பற்றி கேள்வி கேட்கத் தான் செய்வார்கள். விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். இதுதான் அடித்தட்டு மக்களுக்கு நாம் செய்யும் உதவி.
ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் என சொன்னார்கள்; ஆனால் அது முறையாக செயல்படுகிறதா என்பதே கேள்விக்குறி. நான் நேற்று என் தொகுதி முழுக்க சென்று பார்த்தேன். அப்போது எந்த மதுபானக் கடையும் மூடப்படவில்லை ; இது கண்துடைப்பு என மக்கள் என்னிடம் சொல்கிறார்கள்.
பெண்கள், சிறு குழந்தைகள் வரை அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே சிங்கப்படை திட்டத்தை சீக்கிரம் அமைக்க வேண்டும். தவெக அரசு மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஆட்சியாக இருக்க வேண்டும். தவெக அரசின் செயல்பாடுகளை பொறுத்திருந்து பார்ப்போம். வரும் காலங்களில் அமைச்சர்களும், ஆட்சியாளர்களும் சிறந்த முறையில் செயல்பட வேண்டும். ஓட்டு போட்ட, போடாத அனைவருக்கும் நடுநிலையோடு பேசக்கூடிய முதல்வராக விஜய் இருக்க வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.

More Stories
முதல்வர் பேச்சுக்கு செல்வப்பெருந்தகை எதிர்ப்பு
பதிவுக்கு காத்திருக்கும் அண்ணாமலையின் புதிய கட்சி!
அவசர ஆலோசனை கூட்டம் நடத்தும் விஜய்! தேர்தல் கருத்துக் கணிப்புக்கு பிறகு பனையூரில் குவியும் வேட்பாளர்கள்