
சென்னை: சிறுபான்மையினர் மேம்பாட்டை குறிக்கோளாக கொண்டு செயல்படும் 88 கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சிறுபான்மையினர் அந்தஸ்துக்கான சான்றிதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
சிறுபான்மையின மக்களின் மேம்பாட்டை குறிக்கோளாக கொண்டு செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கு, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழை வழங்க கடந்த 2022 டிச.29-ம் தேதியும், மதச்சார்பு சிறுபான்மையினர் நிரந்தர சான்றிதழ் வழங்க 2024, பிப்.2-ம் தேதியும் அரசாணைகள் வெளியிடப்பட்டன.
இந்த அரசாணைகளின் அடிப்படையில், தலைமைச் செயலர் தலைமையிலான அதிகாரமளிக்கப்பட்ட குழு அமைக்கப்பட்டு, விண்ணப்பிக்கும் கல்வி நிறுவனங்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, ஒப்புதல் வழங்கி வருகிறது.
அதனடிப்படையில் இதுவரை 370 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ்களும், 56 மொழிவாரி சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ்களும், 314 மதச்சார்பு சிறுபான்மையினர் அந்தஸ்துக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக குழுவின் பரிந்துரைப்படி பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் அந்தஸ்து கோரி விண்ணப்பித்த கல்வி நிறுவனங்களில் 88 கல்வி நிறுவனங்களுக்கு, நிரந்தர சிறுபான்மையினர் அந்தஸ்துக்கான சான்றிதழ்களை, தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இந்நிகழ்வில், துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஜோ.அருண், துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், சிறுபான்மையினர் நலத்துறை செயலர் எ.சரவணவேல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

More Stories
க்யூட் நுழைவுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
தொடக்கப் பள்ளி மாணவர்கள் அடைவுத் திறன் ஆய்வு: பிப்.18, 20-ம் தேதிகளில் நடைபெறுகிறது
பொறியியல் கல்வி! புதுமையை புகுத்தும் கணினி அறிவியல்