சென்னை: தமிழின் இனிமையையும், தமிழரின் உயர்வுக்கான வழியையும் தன் கவிதையால் காட்டியவர் கவிஞர் பாரதிதாசன் என்று அவரது 136-வது பிறந்தநாளையொட்டி முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
பாவேந்தர் பாரதிதாசன் 136-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில்உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் தமிழ் வளர்ச்சித் துறை செயலர் வே.ராஜாராமன் உள்ளிட்ட அதிகாரிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
முதல்வர் ஸ்டாலின்: தமிழின் இனிமையையும், தமிழரின் உயர்வுக்கான வழியையும் தன்கவிதையால் காட்டியவர் கவிஞர் பாரதிதாசன்.
பாவேந்தரின் திண்மை நிறை தமிழ், ஒளியென நம் இனத்துக்கு துணை நிற்கட்டும். தமிழ் எனும் ஆயுதமேந்தி இன மானம் உரைத்த பாவேந்தர் புகழ் வாழியவே.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: தமிழர்களின் சுயமரியாதை உணர்வை, தமது தீப்பொறி வரிகளால் தட்டி எழுப்பிய கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாள்.
இனப் பகைவர்களின் சூழ்ச்சிகளை கூரிய வரிகளால் தோலுரித்து, தமிழ் இனத்தை எழுச்சி கொள்ளச் செய்த பாவேந்தரின் பாடல்கள் ஆதிக்கத்துக்கு எதிரான திராவிட இயக்கத்தின் போர்க்குரல்.
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: இளைஞர்களுக்கு விழிப்புணர்வை அளிக்கும் தீபமாகவும், சமூக மாற்றத்துக்கு ஊக்கமளிக்கும் சக்தியாகவும் தமிழின் பெருமையை உலகம் முழுவதும் பரப்பிய ஒளியாக பாரதிதாசன் என்றும் நிலைத்திருப்பார். அவரது சிந்தனைகளை நினைவுகூர்வதுடன், அவற்றை நம் வாழ்க்கையிலும் நடைமுறைப்படுத்துவோம்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: பாடல்களால் மக்களிடம் தமிழ் உணர்வை ஊட்டி, தமிழின் தொன்மை, பெருமையை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்தவர் கவிஞர் பாரதிதாசன்.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என உரக்க முழங்கி தமிழ் ஆசிரியர், கவிஞர், எழுத்தாளர் என பல வழிகளிலும் தமிழ் மொழியின் இனிமையை எடுத்துரைத்த பாரதிதாசனின் தமிழ்ப் பணியை எந்நாளும் போற்றி வணங்குவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

More Stories
சேலம் வழியே மே மாத சிறப்பு ரயில்கள்… ஈரோடு, போடனூர் டூ சென்னை- தெற்கு ரயில்வே அறிவிப்பு!
ஆதார், பான் எண்ணைத் திருடி நூதன மோசடி: ரூ.4.70 கோடி ஜிஎஸ்டி செலுத்துமாறு ஓட்டுநருக்கு நோட்டீஸ்
கொடைக்கானலில் 4 நாட்கள் ஓய்வுக்குப் பிறகு சென்னை புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின்