தமிழக வெற்றி கழகத்துடன் எந்த விதமான கூட்டணியிலும் இல்லை என சிபிஐ முத்தரசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதோடு திமுக கூட்டணியில் தொடர்வதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். அவருடைய இந்த பதிவு தற்போது அரசியல் களத்தில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.
தமிழக வெற்றி கழகத்திடம் இருந்த மாநிலங்களவை சீட்டை கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரவீன் சக்கரவர்த்தி மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விஜய்க்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வந்த அவருக்கு தற்போது ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது சம்பந்தமாக சிபிஐ முத்தரசன் கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார்.
அதாவது செய்தியாளர்களை அவர் சந்தித்த நிலையில், பிரவீன் சக்கரவர்த்தி தன்னுடைய பதிவில் சமூக நீதி கூட்டணி என பெயரிட்டு, உங்களுடைய கட்சிகளை இணைத்திருக்கிறார். அதில் உங்களுக்கு உடன்பாடு உள்ளதா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு யார் அந்த அதிகாரத்தை கொடுத்தது என்ற கேள்வியை எழுப்பினார். தொடர்ந்து பேசிய முத்தரசன், எங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
முதலில் நாங்கள் அந்த கூட்டணியிலே இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். அதன்பின்னர் தவெகவுக்கு ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது ஏன் என்பது பற்றியும் விளக்கினார். அதன்படி, கடந்த சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்குமாறு மக்கள் தீர்ப்பு கொடுக்கவில்லை.தவெக என்கிற கட்சி கூடுதலான இடங்களில் வெற்றி பெற்றது. ஆளுநர் அவர்களை சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க சொல்லி இருக்க வேண்டும்.
அவர் அதுபோல் சொல்லாமல் வேண்டும் என்றே காலம் தாழ்த்தினார். வேறொரு முறையில் குடியரசு தலைவர் ஆட்சி என்ற பெயரில் பாஜக ஆட்சியை கொண்டு வருவதற்கு சூழ்ச்சி வலை பின்னப்பட்டது. அதனை தடுத்து நிறுத்தும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியில் இருந்து தங்களுடைய ஆதரவினை தெரிவித்துள்ளது. மற்றபடி கூட்டணி கிடையாது. பாஜக வரக்கூடாது என்ற காரணத்திற்காகவே வெளியில் இருந்து ஆதரவு அளித்தோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கூட்டணிக்கும் பெயருக்கும் எங்களுக்கு சம்பந்தம் கிடையாது என்றும் கூறியுள்ளார். அதோடு திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார் முத்தரசன். தொடர்ந்து பேசிய அவர், இப்படி ஒரு ராஜ்யசபா தேர்தல் வரும்போது நாங்கள் இப்படி ஒரு முடிவினை எடுக்கிறோம் என்பது குறித்து தவெக தரப்பில் இருந்து அணுகி எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. எங்களுடைய கருத்தையும் கேட்கவில்லை.
இப்படி ஒரு விஷயம் நடந்ததாகவே தங்களுக்கு தெரியாது என்றும் ஒரே போடாக போட்டுள்ளார் முத்தரசன். அவருடைய இந்த கருத்து தற்போது அரசியல் கருத்து கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்துக்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் எதிர்ப்பு தெரிவித்தார். அவருடைய பதிவினை அதிக பிரசங்கித்தனம் என விமர்சனம் செய்தார். அதோடு அவரும் பிரவீன் சக்கரவர்த்தியை ராஜ்யசபா எம்பியாக அறிவிப்பது தொடர்பாக தவெக தங்களுடைய கருத்தை கேட்கவில்லை எனவும் கூறியிருந்தார்.
இந்த பிரச்சனையின் பின்னணி என்னெவென்றால் மாநிலங்களவை வேட்பாளராக தான் அறிவிக்கப்பபட்டதற்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் தவெக, காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு என பெயரிடப்பட்ட கூட்டணியில் இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான் அந்த கூட்டணிக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என சிபிஎம், சிபிஐ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More Stories
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
தமிழக அமைச்சரவை கூட்டத்தில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசனை: அமைச்சர் நிர்மல்குமார் தகவல்
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 18-ல் தொடக்கம்