April 24, 2026

திடீரென காலியான சென்னை! தலைநகரிலிருந்து ஓட்டு போட இத்தனை லட்சம் பேர் சென்றுள்ளார்களா?

வாக்களிக்கச் சென்னையிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர் திரும்பியதால் தலைநகரம் வெறிச்சோடியது; இந்த பெரும் வெளியேற்றம் தேர்தல் முடிவுகளில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தங்களது ஒரு விரல் புரட்சியை நிகழ்த்துவதற்காக, சென்னையில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் வரலாறு காணாத வகையில் தங்கள் ஊர்களுக்குப் பயணித்தனர்.

சொந்த ஊர் செல்லக் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் குவிந்த பயணிகள், போதிய பேருந்துகள் இல்லாததால் நள்ளிரவில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பேசுபொருளாக மாறியது. தேர்தல் விடுமுறையை முன்னிட்டுச் சென்னையிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் கிளாம்பாக்கத்தில் திரண்டனர். அரசு சிறப்புப் பேருந்துகளை அறிவித்திருந்தாலும், நள்ளிரவில் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகள் வராததால் பதற்றம் உருவானது.
கிளாம்பாகத்தில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்..!

திடீர் சாலை மறியல்
பல மணி நேரம் காத்திருந்தும் பேருந்துகள் வராததால் ஆத்திரமடைந்த பயணிகள், நள்ளிரவு 1 மணியளவில் பேருந்து முனையத்தின் வெளியே உள்ள ஜி.எஸ்.டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

டிவிகே (TVK) அரசியல் முழக்கங்கள்
போராட்டத்தின் போது பயணிகள் மற்றும் சில கட்சித் தொண்டர்கள் தங்களது ஆதரவு இயக்கங்களுக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பியதால் அந்த இடமே பரபரப்பானது. இந்த மறியலால் தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்கத்தில் போக்குவரத்து பல மணி நேரம் முடங்கியது. ஒருசில பயணிகள் பேருந்து கிடைக்காத விரக்தியினால் மீண்டும் தான் தங்கியிருந்த இடங்களுக்கே சென்று உள்ளனர். தேர்தல் தினம் அன்று கூட பேருந்து கிடைக்கவில்லை என பயணிகள் குற்றம் சாட்டினர்.

எவ்வளவு பயணிகள் பயணித்து உள்ளனர்?
இந்நிலையில்.தேர்தல் தேதியான ஏப்ரல் 23-க்கு முன்னதாக, கடந்த சில நாட்களில் மட்டும் சென்னையிலிருந்து மொத்தம் 6.27 லட்சம் பேர் பேருந்துகள் மூலம் தங்கள் ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளனர். இது கடந்த தேர்தல்களை விட மிக அதிகமான எண்ணிக்கையாகும். போக்குவரத்துத் துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் ஆகிய முனையங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்தச் சிறப்பான ஏற்பாட்டால் மட்டுமே இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தைக் கையாள முடிந்தது.

85.15% சாதனையின் ரகசியம்
தமிழகம் முழுவதும் இம்முறை பதிவான 85.15% என்ற இமாலய வாக்குப்பதிவிற்கு, சென்னையில் இருந்து ஊர் திரும்பிய இந்த 6 லட்சம் மக்களின் பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. தேர்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஊர் சென்ற மக்கள் அனைவரும் இன்று முதல் மீண்டும் சென்னைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். அவர்களின் வசதிக்காகத் தற்போது மறுமார்க்கமாகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

வாக்களிப்பது வெறும் கடமை மட்டுமல்ல, அது தங்கள் உரிமையெனக் கருதி, அத்தனை சிரமங்களையும் கடந்து 6.27 லட்சம் மக்கள் ஊர் சென்று வாக்களித்தது, தமிழகத்தின் ஜனநாயகப் பக்குவத்தை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.

சென்னை திரும்பும் மக்கள்
பொதுமக்கள் தங்களது ஜனநாயக கடைமை ஆற்றியவுடன் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு வருகின்றனர். தற்போதும் போதிய பேருந்து வசதி இல்லை என பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஒரு சில பயணிகள் பேருந்து கிடைக்காத ஆத்திரத்தில் அதனை வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி வருகின்றனர்.

Spread the love