
திருப்பத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் தங்க கோபுர கும்பாபிஷேகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் மூலவர் கோபுரம் 108 அடி உயரத்தில் அஷ்டாங்க விமானமாக உள்ளது. இது ‘ஓம் நமோ நாராயணாய’ எனும் மந்திரத்தை உணர்த்தும் வகையில் 3 தளங்களாக உள்ளது. இதன் உச்சியில் உள்ள தளமான முதல் நிலைக்கு தங்க தகடு வேயும் திருப்பணி நடைபெற்றது. திருப்பணி முடிந்த நிலையில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி பிப்.1ம் தேதி திரு வீதி ஸ்ரீஸஹஸ்ர நாம பாராயணம், சுதர்சன ஹோமங்கள் நடைபெற்றன. பிப்.2ம் தேதி காலை அனுக்கை, வாஸ்து ஹோமம், வாஸ்து சாந்தி, அக்னி பிரதிஷ்டை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. மாலையில் யாக சாலையில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு முதல் கால யாக சாலை பூஜை தொடங்கியது.
பிப்.3ம் தேதி 2 மற்றும் 3ம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. பிப்.4ம் தேதி 4 மற்றும் 5ம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. நேற்றை தினம் 6 மற்றும் 7ம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.

இந்த நிலையில், இன்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு ஹோமம், 8ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 8 மணிக்கு யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்து. காலை 9.55 மணிக்கு மூலவர் தங்க விமான கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிகழ்வில், அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார், மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சரவண கணேசன், சிராஸ்தார் சேவற்கொடியோன், இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான், டிரஸ்ட் தலைவர் காந்தி, திருப்பணிகள் குழுத் தலைவர் ராஜ்மோகன் அருணகிரி, துணைத் தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More Stories
திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் ஆழ்வாா் திருமஞ்சனம்
திருமலையில் 69,389 பக்தா்கள் தரிசனம், 20,247 போ் முடி காணிக்கை
பழநி தைப்பூசத் திருவிழாவில் ‘திருஊடல்’ வைபவம்: இன்று இரவு தெப்ப உற்சவம்