திருப்பூர் மாநகரில் நீடித்து வரும் குப்பை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பது தொடர்பாக நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில், விரைவில் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் ஆலங்காடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பொறுப்பு மேயரும் துணை மேயருமான பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இதில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன் உள்ளிட்ட திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கிராமப்புற பாறைக்குழிகளில் மாநகராட்சி குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய பொதுமக்கள் மீது காவல்துறை மேற்கொண்ட கைது நடவடிக்கைக்கு கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், திருப்பூரின் திடக்கழிவு மேலாண்மையை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் தனிக்குழு அமைக்க வேண்டும், ஒன்றிய அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதலமைச்சரை அனைத்து கட்சியினரும் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து செய்தியாளர் சந்திப்பில் பொறுப்பு மேயரும் துணை மேயருமான பாலசுப்பிரமணியம், தெரிவித்ததாவது:- பொதுமக்கள் வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கினால் குப்பை பிரச்சனை பெருமளவில் குறையும் என்று தெரிவித்தார்.குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பதற்கான புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளதாகவும், வீடுகளுக்கு தனித்தனி குப்பைத் தொட்டிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், உயிரி எரிவாயு தயாரிப்பு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தெடுக்கும் நவீன இயந்திரங்கள் வாங்குவதற்கான டெண்டர்கள் விடப்பட்டுள்ளதாகவும், அவை செயல்பாட்டுக்கு வந்தால் பெரும்பாலான கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
குப்பை மேலாண்மை தொடர்பான தற்போதைய சிக்கல்களுக்கு வரும் டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய அவர், பொதுமக்கள் பொறுமையுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.போராட்டப் பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் மட்டுமே ஈடுபட்டுள்ளதாகவும், தேவையற்ற மோதல்களை தவிர்க்க அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
திருப்பூர் மாநகரை தூய்மையான நகரமாக மாற்ற மாநகராட்சி உறுதிபூண்டுள்ளதாகவும், குப்பை பிரச்சனைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் என்றும் பொறுப்பு மேயர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

More Stories
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
26-08-2026
திருப்பூரில் தேமுதிக சார்பில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த தின விழா