திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்திபெற்ற கார்த்திகை தீபத்திருவிழா நவ.15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபபெருவிழா இன்று நடைபெறுகிறது.
அதிகாலை 4 மணிக்கு கோயிலில் சுவாமி சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. மகா தீபத்தைக் காண நேற்று மாலையில் இருந்து பக்தர்கள் திருவண்ணாமலையில் குவித்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் தீபக்கொப்பரை நேற்று அதிகாலை கோயிலில் சிறப்பு பூஜை செய்து, சுமார் 320 கிலோ எடை கொண்ட கொப்பரை அண்ணாமலையார் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, மலை உச்சியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை நெய், தீபம் ஏற்ற பயன்படுத்தடும் காடா துணி ஆகியவை கொண்டு செல்லப்படுகிறது. தீபத்திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோயில் வளாகம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வண்ண மின்விளக்குகளுடன் ஜொலிக்கின்றன.
பக்தர்களின் பாதுகாப்பு பணியில் வடக்கு மண்டல ஐஜி பிரவீன் குமார் அபினபு தலைமையில் 15,500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மாநகரம் மற்றும் கோயில், கிரிவல பாதையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாநகரமே காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மகா தீப கொப்பரை நேற்று மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
பருவதமலை: இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பருவதமலை 4,560 அடி உயரம் கொண்டது. இந்த மலை உச்சியில் ஸ்ரீ பிரம்பராம்பிக்கை உடனுறை மல்லிகாஜுனேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலிலும் கார்த்திகை தீபத்திருநாள் அன்று தீபம் ஏற்றப்படுகிறது. அதையொட்டி, பருவதமலையில் இன்று மாலை தீபம் ஏற்றப்பட உள்ளது.
பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு, பாதுகாப்பு பணிக்கு போதிய காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 1,200 பக்தர்கள் மட்டுமே மலை ஏற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மலை உச்சிக்கு போன மகா தீப கொப்பரை: மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் மகா தீபக் கொப்பரை நேற்று மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக கோயிலில் சிறப்பு பூஜைகள் தீப கொப்பரைக்கு செய்யப்பட்டது. தீப கொப்பரைக்கு வண்ணம் தீட்டப்பட்டு பஞ்சலோகத்தால் ஆன அர்த்தநாரீஸ்வரர் உருவம் பதிக்கப்பட்டுள்ளது.
தீப கொப்பரைக்கு பூஜை நிறைவடைந்த பின்னர் கொப்பரை தூக்கும் பணியாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் தோல்சுமையாக தீபமலை உச்சிக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த கொப்பரை ஐந்தே முக்கால் அடி உயரமும், 320 கிலோ எடையும் கொண்டுள்ளது. இதில், 4,500 கிலோ நெய் மற்றும் 1,500 மீட்டர் காடா துணிகளை பயன்படுத்தி இன்று மாலையில் மகா தீபம் ஏற்றப்படவுள்ளது. கடந்தாண்டு போல் இந்த ஆண்டு மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

More Stories
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தேரோட்டம்
“பெண் ஆட்சியர் புகார் மறைக்கப்பட்டதா?” – முதல்வர் விளக்கமளிக்க உதயநிதி கோரிக்கை
தி.மலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்