திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை கலெக்டர் வந்தனா கார்க் தொடங்கி வைத்தார்.நாடு முழுவதும் 8வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தற்போது நடந்து வருகிறது.
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்பணி கடந்த 2021ம் ஆண்டு நடந்திருக்க வேண்டும். கொரோனா பரவல் காரணமாக, தற்போது கணக்கெடுப்பு பணி தாமதமாக நடைபெறுகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில், 12 தாசில்தார்கள், 18 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகர்ப்புற பகுதிகளில் மாநகராட்சி ஆணையர், 5 நகராட்சி ஆணையர்கள், 8 பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் 30 தற்காலிக தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதன்முறையாக டிஜிட்டல் முறையில் நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கணக்கெடுப்பு பணி இரண்டு கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டமாக வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுக்கும் பணி முடிவடைந்தது.
இக்கணக்கெடுப்பில் வீட்டு நிலைமைகள் வசதிகள் பற்றிய முக்கிய தகவல்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் இரண்டாவது கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான பயிற்சி வகுப்பு திருவண்ணாலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ெதாடங்கியது. வரும் 16ம் தேதி வரை இப்பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
இந்நிலையில், கணக்கெடுப்பு பணிக்கான பயிற்சி வகுப்பை கலெக்டர் வந்தனா கார்க் தொடங்கி வைத்தார். சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பயிற்சியை முறையாக பெற்று, இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு பணி முழுமையாகவும், சிறப்பாகவும் நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், டிஆர்ஓ சிவசுப்பிரமணியன் மற்றும் அனைத்து தாசில்தார்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

More Stories
கிருஷ்ணகிரி அணை பகுதியில் ரூ.9 கோடியில் வளர்ச்சி பணிகள்
ஆயுத பூஜை தொடர் விடுமுறை: ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு – பயணிகள் கடும் அதிர்ச்சி!
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள கூடுதல் நீதிபதிகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!!