தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்.23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தி.மு.க
தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை
எட்டியுள்ளன. இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்
மனிதநேய ஜனநாயக கட்சி (ம.ஜ.க), எஸ்.டி.பி.ஐ (SDPI) மற்றும் முக்குலத்தோர்
புலிப்படை ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான
ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதன்படி, தி.மு.க. கூட்டணியில் ம.ஜ.க, எஸ்.டி.பி.ஐ, முக்குலத்தோர் புலிப் படை
கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு
மனிதநேய ஜனநாயக கட்சி (ம.ஜ.க)
தி.மு.க கூட்டணியில் இணைந்துள்ள ம.ஜ.க-வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி செய்தியாளர் களிடம்
கூறுகையில், தி.மு.க கூட்டணியில் எங்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் உள்ளிட்ட 5 தொகுதிகள் விருப்பப் பட்டியலாகக் கொடுத்துள்ளோம்.
நாளை மீண்டும் முதலமைச்சரைச் சந்திக்க உள்ளோம், அப்போது எந்தத் தொகுதி
என்பது உறுதி ஆகும்.
234 தொகுதிகளுமே எங்கள் தொகுதிகள்தான். இந்த சந்திப்பு மிகுந்த மனநிறைவைத்
தருகிறது என்றார். கடந்த 2016 தேர்தலில் அ.தி.முக கூட்டணியில் இரட்டை இலை
சின்னத்தில் போட்டியிட்டு நாகை தொகுதியில் தமிமுன் அன்சாரி வெற்றி பெற்றது
குறிப்பிடத்தக்கது.
முக்குலத்தோர் புலிப்படை
நடிகர் கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை கட்சிக்கும் 1 தொகுதி
ஒதுக்கப்பட்டுள்ளது. இக்கட்சியும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருணாஸ் பேசுகையில், நான்
விருப்பப்பட்டுதான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறேன். அ.தி.மு.க
கூட்டணியில்தான் கூட்டணிக் கட்சிகளை இரட்டை இலையில் நிற்கச் சொல்லி
கட்டாயப்படுத்துகிறார்கள். ஜி.கே. வாசன் ஏன் தாமரை சின்னத்தில் நிற்கிறார்?
ஆனால், தி.மு.க கூட்டணியில் என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்று
குறிப்பிட்டார்.
எஸ்.டி.பி.ஐ
எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசியத் துணைத்தலைவர் தெகலான் பாகவி கூறுகையில்,
தி.மு.க கூட்டணியில் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு
செய்துள்ளதாகவும், அந்தத் தொகுதி எது என்பது இன்று இறுதியாகும் என்றும்
தெரிவித்தார்.
தி.மு.க கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், தே.மு.தி.க,
ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு
மக்கள் தேசிய கட்சி, ம.ம.க உள்ளிட்ட கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தற்போது எஞ்சியுள்ள சிறிய கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வருவதால்,
கூட்டணி உடன்பாடுகள் முழுமையடைந்து வருகின்றன.

More Stories
“ஒரு சொட்டு தண்ணீர் தராத காங்கிரஸுக்கு 28 எம்எல்ஏ சீட்டு, ஒரு ராஜ்யசபா சீட்டு!” – சீமான் விமர்சனம்
திமுக, அதிமுக, தவெக – யாருக்கு வெற்றி? லட்ச கணக்கில் Bettingநடக்குது.. ஷாக் தகவல்..!!
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவர்.. குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் அன்பில் மகேஸ்