April 20, 2026

தேர்தலால் அதிகரித்த பட்டாசு உற்பத்தி, தடை செய்யப்பட்ட சரவெடி – விருதுநகர் வெடி விபத்தில் வெளியாகும் தகவல்கள்!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் இதுவரை 23 -பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

நேற்றைய தினம் விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 23 -பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இதில் பலியான மற்றும் படுகாயம் அடைந்தோருக்கு நிவாரணம் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தேர்தல் சமயம் என்பதால் நிவாரணம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும் சூழல் உருவாகியிருக்கிறது.

விருதுநகர் அருகே காட்டனார் பட்டி முத்துராமலிங்கம் கிராமத்தில் இயங்கி வந்த வனஜா பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில் 23 பேர் உலா கருகி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இதில் ஆறு பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்ததால் இந்த பகுதி முழுக்க சோகத்தில் மூழ்கி இருக்கிறது.

தேர்தலுக்காக குவிந்த ஆர்டர்கள்

இந்தியாவின் மிக முக்கியமான பட்டாசு உற்பத்தி மூலமாக இருக்கக்கூடிய சிவகாசி, விருதுநகர் மாவட்டத்தில் இந்த மாதம் அதிக அளவில் பட்டாசு ஆர்டர்கள் வந்து குவிந்ததாக சொல்லப்படுகிறது.
ஐந்து மாநில தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் பிரச்சாரங்களின் போது பட்டாசுகளை அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன. இதன் பொருட்டு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி நடந்திருக்கிறது. மேலும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் அதிகளவிலான பெண்கள் பட்டாசு வேலையில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

  

இதனை ஒட்டி சேர்வைக்காரன் பட்டி, ஆதிபட்டி, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்து 50 தொழிலாளர்கள் நேற்றைய தினம் அந்த பட்டாசு ஆலையில் வேலை செய்திருக்கின்றனர்.

சரவெடி தயாரிப்பு

வனஜா பட்டாசு ஆலையில் சுப்ரீம் கோர்ட் தடை செய்திருந்த சரவெடி தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்து இருக்கின்றனர். தேர்தல் காலம் என்பதால் சரவெடி தேவை அதிகரித்து இருக்கிறது. அதுமட்டுமின்றி பெண்கள் வீடுகளில் கூட சரவெடிகளை தயாரித்து அனுப்பி வைப்பதாக புகார்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. 40க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த ஆலையில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் சரவெடிகள் தான் அதிக உற்பத்தி செய்யப்பட்டு இருக்கும் என அதிகாரிகள் சந்தேகம் அடைந்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு சொந்தமான இந்த வனஜா பட்டாசு ஆலையில் குறுகிய அறையில் கூடுதலான அளவில் பணியாளர்களை பணி அமர்த்தி வேலை செய்ய வைத்ததே அதிக உயிரிழப்புக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

கோடை காலங்களில்..

தமிழகத்தில் குறிப்பாக கோடை காலங்களில் பட்டாசு ஊழியர்கள் வெடி விபத்தில் சிக்கி உயிரிழப்பது தொடர் கதையாகி இருக்கிறது. இது குறித்து அரசு முறையான வழிமுறைகளை கொண்டு வர வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை. மேலும் கிராமப்புறங்களில் வறுமை காரணமாக மே மாதங்களில் விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளையும் பெற்றோர் பட்டாசு ஆலைகளுக்கு வேலைக்கு அழைத்துச் செல்லும் சூழல் உருவாகி இருக்கிறது. இந்த பின்புலத்திலிருந்து வேலைகளுக்கு செல்லும் பெற்றோர் மற்றும் குழந்தைகள் குடும்பத்தோடு பட்டாசு ஆலைகளில் இறப்பது தொடர் கதையாகியுள்ளது.

விருதுநகர் மற்றும் சிவகாசி அதை சுற்றியுள்ள கிராமங்களில் 1200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் ஆண்கள் பெண்கள் என மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர்

Spread the love