
சென்னை: தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அடிப்படைக் கற்றல் திறனை சோதனையிடும் 100 நாள் சவால் நிகழ்வு வரும் 18, 20-ம் தேதிகளில் நடைபெறுகிறது.
இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: 2024-25-ம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் வாசிப்பு, கணிதத் திறன், கற்றல் அடைவுகள் குறித்து 100 சவாலை பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
அதன்படி, நடப்பு கல்வியாண்டில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் 100 நாட்கள் சவாலுக்கு தயார் நிலையில் உள்ளதாக முன்மொழியப்பட்டுள்ளது. இம்மாதம் 3-வது வாரத்தில் 100 நாள்கள் சவால் மதிப்பீட்டு ஆய்வு நடத்தப்பட உள்ளது.
அதன்படி, 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் 18-ம் தேதியும், 4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 20-ம் தேதியும் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் அடிப்படைத் திறன்களை மதிப்பீடு செய்ய வேண்டும்.
ஒரு வகுப்புக்கு குறைந்தபட்சம் 5 மாணவர்களிடம் இந்த கற்றல் அடைவுத் திறன் சோதிக்கப்பட வேண்டும். இந்த தகவலை அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக் குழு பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த சோதனை நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

More Stories
க்யூட் நுழைவுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
தமிழகத்தில் 88 கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சிறுபான்மையினர் அந்தஸ்து: சான்றிதழ்களை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
பொறியியல் கல்வி! புதுமையை புகுத்தும் கணினி அறிவியல்