April 6, 2026

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் விதி மீறல் தொடர்பாக இதுவரை 115 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15ம் தேதி தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

மாவட்டத்திலுள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் பறக்கும் படைகள் மற்றும் நிலையானக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், பறக்கும் படைகள் மற்றும் நிலையானக் கண்காணிப்புக் குழுக்களின் நடவடிக்கைகள் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆகியோரிடமிருந்து வரும் புகார்கள்

சம்மந்தப்பட்ட குழுவிற்கு தெரிவிக்கப்பட்டு, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சி-விஜில் செல்போன் செயலி மூலம் பெறப்படும் புகார்களும், தொடர்புடைய குழுக்களுக்கு அனுப்பப்பட்டு 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு நடவடிக்கையின் விவரங்கள் இணையத்தில் அப்லோட் செய்யப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மார்ச் 15 முதல் இன்று வரை கட்டுப்பாட்டு அறைக்கு கட்டணமில்லா தொலைபேசி மூலம் 55 புகார்களும், சி-விஜில் செயலி மூலம் 60 புகார்களும் என 115 புகார்கள் பெறப்பட்டுள்ளது.

பெறப்பட்ட புகார்கள் சம்பந்தப்பட்ட குழுக்களுக்கு அனுப்பப்பட்டு, தொடர் நடவடிக்கை மேற்கொண்டு, தீர்வு காணப்பட்டுள்ளது. அதேபோன்று தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முரணாக எடுத்துச் செல்லப்பட்ட 102 சம்பவங்களில் ரூ. 1 கோடியே, 55 லட்சத்து, 86 ஆயிரத்து 790 பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 85 பேரின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்பு ரூ. 1 கோடியே 33 லட்சத்து 27 ஆயிரத்து 410 திருப்பி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 17 பேர் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் ரூ. 22 லட்சத்து 59 ஆயிரத்து 380 சம்பந்தப்பட்ட சார் நிலை கருவூலங்களில் வைக்கப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல் தொடர்பாக மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களைத் தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 4286 மூலம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Spread the love