சென்னை: நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை குறித்து சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்தார்.
மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 103 பேர் நேபாளம் சென்றிருந்தனர். இவர்களில், கும்பகோணத்தில் இருந்து சென்ற 57 பேரில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் விவரித்தார்.
தமிழகத்தில் இருந்து நேபாளம் சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கியது குறித்து எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. அதன்மீது, அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், “நேபாள கைலாஷ் யாத்திரைக்கு தமிழகத்தைச் சேர்ந்த 103 பேர் சென்றிருந்தனர். இந்நிலையில் நேபாளத்தில் திடீர் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் 384 சுற்றுலாப் பயணிகளும் சிக்கினர். இதில் 291 பேர் வெளிநாட்டினர். 93 பேர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள். இதுவரை 209 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 75 பேருக்கு தீவிரக் காயம் ஏற்பட்டுள்ளது.
21 தமிழர்கள் மீட்பு:
தமிழகத்தைச் சேர்ந்த 103 பேர் நேபாளம் சென்றிருந்தனர். இவர்களில் கும்பகோணத்தில் இருந்து சென்ற 57 பேரில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை குரோம்பேட்டை மகாதேவ் கைலாஷ் ஏஜென்ஸி மூலம் நேபாளத்துக்கு கைலாஷ் யாத்திரை சென்ற 40-க்கும் மேற்பட்டோரின் நிலைமை குறித்து தற்போது வரை தகவல் இல்லை.
முதல்வர் விஜய் தலைமையில் நேபாளம் சம்பவம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு துணையாக இருக்கும். நேபாள போலீஸ் உள்ளிட்ட அனைத்து துறைகளுடன் இணைந்து தேடுதல் பணி மேற்கொள்ளப்படுகிறது.
காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்திடம் தொடர்பில் இருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளவும், அவர்களின் குடும்பத்தினர் தொடர்பு கொள்ளவும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

More Stories
“காவிரி டெல்டாவை வறட்சிப் பகுதியாக அறிவிக்கக் கோரி ஆக.28-ல் இ.கம்யூ போராட்டம்” – மு.வீரபாண்டியன்
கும்பகோணத்தில் இருந்து நேபாளத்துக்கு சுற்றுலா சென்றவர்களில் இதுவரை 21 பேர் மீட்பு
27-08-2026