சென்னை: ‘வருகையில்லா (பிரசன்ஸ்லெஸ்) பத்திரப்பதிவு மூலம் 24 மணி நேரமும் பதிவு செய்யலாம் என’ மத்திய சென்னை சார்-பதிவாளர் நவீன் தெரிவித்தார்.
தமிழக பதிவுத்துறை மற்றும் அகில இந்திய கட்டுநர் சங்க தென்னக மையம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மனை பிரிவுகளின் முதல் விற்பனைக்கான பத்திரப் பதிவை, சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் வராமல் இணையவழியில் மேற்கொள்ளும் வருகையில்லா பத்திரப்பதிவு (பிரசன்ஸ்லெஸ் ரிஜிஸ்ட்ரேஷன்)முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அம்பத்தூரில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை சங்கத்தின் முன்னாள் தலைவர் பீஷ்மா ஆர்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் மத்திய சென்னை சார்-பதிவாளர் கே.நவீன் கலந்துகொண்டு புதிய நடைமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மனைகளின் முதல் விற்பனை பத்திரப் பதிவை ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் ‘பிரசன்ஸ்லெஸ்’ முறையில் மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வழக்கமான நடைமுறையில், பத்திரங்களை முத்திரைத்தாளில் தயாரித்து, ஆன்லைனில் டோக்கன் பெற்று, குறிப்பிட்ட நாளில் வாங்குபவர், விற்பவர் மற்றும் சாட்சிகள் என அனைவரும் சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் செல்ல வேண்டும்.
ஆனால், புதிய ‘பிரசன்ஸ்லெஸ்’ முறையில் பொதுமக்கள் சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் வரவேண்டிய அவசியமில்லை. வார இறுதி நாட்கள் உள்ளிட்ட ஆண்டின் 365 நாட்களும், 24 மணி நேரமும் தங்களுக்கு வசதியான எந்தவொரு இடத்திலிருந்தும் ஆன்லைன் மூலமாக பத்திரப் பதிவை மேற்கொள்ள முடியும்.
இதற்கு இணையதள வசதியுடன் கூடிய கணினி, மடிக்கணினி அல்லது செல்போன் உடன் பயோமெட்ரிக் சாதனங்களான கைரேகை சாதனம், ஐரிஸ் ஸ்கேனர், வெப்கேமரா ஆகியவை இருந்தால் போதுமானது.
பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே ஆவணங்களைச் சமர்ப்பித்து ஆன்லைன் மூலமாக பதிவை நிறைவு செய்ய முடியும். இதன் நடைமுறைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் அகில இந்திய கட்டுநர் சங்க தென்னக மையம் தலைவர் கே.கோபிநாதன், செயலாளர் ஏ.சத்தியநாராயணா, இந்திய கட்டுநர் சங்க, தமிழக கிளையின் சிஎம்டிஏ – டிடிசிபி கமிட்டித் தலைவர் எஸ்.ராமபிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

More Stories
சுதந்திர தினத்தையொட்டி காவல், தீயணைப்பு துறைகளைச் சேர்ந்த 1,057 பேருக்கு பதக்கங்களை அறிவித்தது ஒன்றிய அரசு
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றும் முன் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும்: ஐகோர்ட் பதிவுத்துறை அறிவுறுத்தல்
80-வது சுதந்திர தினத்தை ஒட்டி சென்னையில் 30 கோயில்களில் அமைச்சர்கள் பங்கேற்புடன் சிறப்பு வழிபாடு, பொது விருந்து