சென்னை: பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஆளுநர் உரையில் கூறப்பட்டு இருப்பதாவது: அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் கல்வி, பொதுப்பட்டியலில் இருப்பதன் காரணமாக, நீட் தேர்வு, தேசியக்கல்விக்கொள்கை திணிப்பு, மும்மொழிக்கொள்கை போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
எனவே, கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும்.
உண்மையான கல்வி சீர்திருத்தம் என்பது கல்வி நிறுவனங்களின் தரத்தையும், அதன் கற்பித்தல் திறனையும் உயர்த்துவதில்தான் அடங்கியுள்ளது.
அதற்கேற்ப மாநிலத்தின் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ள தேவையான உதவி பேராசிரியர் மற்றும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நிரப்புவதற்கு போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும்.
அதுமட்டுமின்றி, உயர்கல்வித்துறையில் பல்வேறு அடிப்படை சீர்திருத்தங்களை அரசு கொண்டுவர உள்ளது. இதன்மூலம் தமிழக மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வி கிடைக்கும்.
அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் அரசு ஊழியர்கள். அதேபோல், இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்போர் ஆசிரியர்கள்.
எனவே, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படும். அவர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் மேலும் செம்மைப்படுத்தப்படும்.
இலங்கைக் கடற்படை அதிகாரிகளால் கைது செய்யப்படுவதும், அவர்களின் மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, நீண்டகாலம் பிடித்து வைக்கப்படுவதும், கணிசமான அளவில் அபராதங்கள் விதிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நீண்டகால பிரச்சினைக்கு தீர்வுகாண மத்திய அரசை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும். அதேசமயம், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதார நிலைத் தன்மையையும் வலுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More Stories
மேகேதாட்டுக்கு ‘நோ’ சொன்ன தமிழகம்!கர்நாடக அரசுக்கு கடும் கண்டனம்அரசின் தனித் தீர்மானம்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
“நீர் மேலாண்மை பற்றி யோசியுங்கள்” – மேகேதாட்டு தீர்மானத்தில் பிரேமலதா பேச்சு
ராகுல் காந்திக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து