
2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிராக ஆட பாகிஸ்தான் சம்மதித்ததை அடுத்து அடுத்தடுத்த பில்ட் அப்கள் தொடங்கி விட்டன. இப்போது இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டஸ்சேட், கொழும்புவில் பாகிஸ்தானை எதிர்கொள்வது பெரும் சவால் என்று கூறியுள்ளார்.
இப்போதெல்லாம் கிரிக்கெட் மைதானங்களில் ஆடப்படுவதை விட வெளியில் சொல்லாடல் மைதானங்களின் வார்த்தைகள் மட்டைகளாகவும் பந்துகளாகவும் மாறிவிட்டன.
பாகிஸ்தானுடன் விளையாடினாலும் விளையாடா விட்டாலும் இந்திய அணியின் பயிற்சியில் எந்த வித மாற்றமோ தொய்வோ இல்லை என்கிறார் டஸ்சேட். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
முதலில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. ஆட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்கள் தயாரிப்பில் எந்த வித மாற்றமும் இருக்கப்போவதில்லை. ஏதாவது நடந்து நிச்சயம் போட்டி கடைசி கட்டத்தில் நடக்கும் என்றே நாங்கள் நம்பியிருந்தோம். அதனால் விஷயங்களை அணுகும் முறையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை.
நேற்று மாலையும் இன்று அதிகாலையும் போட்டி நடைபெறும் என்று உறுதியான தகவல் கிடைத்தது. இந்த போட்டியின் முதல் கட்டத்தில் வலுவான அணியான பாகிஸ்தானுக்கு எதிராக மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். போட்டி நடைபெறும் என்று எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தோம்.
இரு நாடுகளுக்கிடையேயான அரசியல் உணர்வுகள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து முன்பே நான் கூறியுள்ளேன்; அவற்றிலிருந்து விலகி இருக்க முயற்சிக்கிறோம். எங்களுக்குப் முக்கியமானது கிரிக்கெட் மட்டுமே. கடந்த இரண்டு வாரங்களாக பாகிஸ்தான் கொழும்புவில் ஆடி அதன் பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைமைகளுக்குத் தயாராகி இருக்கின்றது. நாங்கள் அங்கு சென்று பாகிஸ்தானுக்கு எதிராக ஆடுவது என்பது சவாலான விஷயம்தான்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்காகவே எங்கள் சிறந்த ஆட்டத்தை தக்க வைக்க பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு டஸ்சேட் தெரிவித்துள்ளார்.
ஆனால் பாகிஸ்தான் தங்களின் முதல் இரண்டு குழு போட்டிகளை கொழும்பிலுள்ள சிங்களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் விளையாடியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான போட்டி கொழும்பிலுள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும். பிப்ரவரி 10 அன்று நடைபெறும் இரண்டாவது குழு போட்டிக்கும், பிப்ரவரி 15 அன்று இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கும் இடையில் பாகிஸ்தானுக்கு நான்கு நாட்கள் ஓய்வு உள்ளது.
மறுபுறம், இந்தியாவுக்கு குறுகிய இடைவெளியே உள்ளது. வியாழக்கிழமை டெல்லியில் நமீபியாவுக்கு எதிராக விளையாடிய பிறகு, பிப்ரவரி 13 அன்று அவர்கள் கொழும்பு பயணம் செய்கின்றனர். சமீபத்திய நேரடி மோதல்களில் இந்தியா, பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றிகளையே பெற்று வந்துள்ளது. 2022 அக்டோபர் முதல் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஐந்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More Stories
T20 WC 2026: இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் சம்மதித்தது எப்படி?
சிஎஸ்கேவின் ‘விசில் போடு’ விளம்பரத்தில் மாற்றமா?
T20 WC 2026 அலசல்: ஆர்ச்சர், ஆதில் ரஷீத் பந்துவீச்சை நொறுக்கிய நேபாளம்!