
திமுக ஆட்சியில் செய்யப்பட்ட மகளிர் நலத்திட்டங்கள் குறித்து பிப்ரவரி 23 முதல் மார்ச் 8 வரை வீடு வீடாகப் பரப்புரை செய்ய வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கடந்த ஜனவரி 13-ம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ பெயரில் வீடு வீடாகப் பரப்புரை நடத்த வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் மகளிருக்காக செயல்படுத்தப்பட்டுள்ளன. நமது சாதனை திட்டங்களால் மகளிர் வெல்லும் தமிழ்ப் பெண்களாக உயர்ந்துள்ளனர்.
இதை ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்களிடமும் எடுத்துச் சென்று சேர்ப்பதே ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ பரப்புரையின் நோக்கமாக இருக்க வேண்டும். இந்த பரப்புரையை, வீடு வீடாகச் சென்று மேற்கொள்ளும் விதமாக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 10 மகளிரை கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் சார்பில் ஒரு உறுப்பினர் வீதம் தேர்வு செய்யப்பட்டு தொகுதி அளவிலான பயிற்சிக் கூட்டங்கள் பிப்ரவரி 22-ம் தேதிக்குள் நடத்தப்பட வேண்டும்.
இந்த பயிற்சியை சட்டப் பேரவைத் தொகுதி மகளிரணி பொறுப்பாளர்கள் வழங்குவர். பயிற்சிக் கூட்டத்தில், ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ பரப்புரை பற்றிய முழு பயிற்சியும் வாக்குச்சாவடி அளவிலான மகளிர் குழு பொறுப்பாளர்களுக்கு அளிக்கப்படும். அதன்பின் அவர்கள் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் உள்ள இதர உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்து பரப்புரையை தொடங்க வேண்டும். தொடர்ந்து நமது அரசின் சாதனைகளை பிப்ரவரி 23 முதல் மார்ச் 8-ம் தேதிக்குள் வீடு வீடாக பரப்புரை செய்ய வேண்டும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மண்டல பொறுப்பாளர்கள், பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் செய்துதர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிப்ரவரி 22-ல் கோவையில்… இதனிடையே திமுக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட இன்னொரு அறிவிப்பில், திமுக மேற்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு பிப்ரவரி 22-ம் தேதி கோவை கருமத்தம்பட்டி, கணியூர் டோல்கேட் அருகே, இளைஞரணிச் செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

More Stories
தமிழகம் வளர்ச்சி மாநிலமாக தொடர துணை நிற்க வேண்டும்: ‘சாம்பியன்ஸ் ஆஃப் தமிழ்நாடு’ விழாவில் இளைஞர்களுக்கு முதல்வர் அழைப்பு
ரத்தக் குழாய் வெடித்த இளைஞருக்கு மறுவாழ்வு: ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை