October 8, 2026

பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் தொடர் வெற்றிகளை பெற உத்தராகண்ட் முதல்வர் தாமி பிரார்த்தனை

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நீண்ட ஆயுளுடன் இருக்கவும், தொடர் வெற்றிகளைப் பெறவும் வேண்டி உத்தரகாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வழிபாடு மேற்கொண்டார்.

கடந்த 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி குஜராத்தின் முதல்வராக பதவியேற்ற நரேந்திர மோடி, அது முதல் தொடர்ந்து அரசு தலைவராக நீடித்து வருகிறார். 2014 வரை மூன்று முறை குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, 2014 முதல் பிரதமராக பதவி வகித்து வருகிறார்.

அரசு தலைவராக 25 ஆண்டுகளை அவர் நிறைவு செய்துள்ளதை அடுத்து, தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நீண்ட ஆயுளுடனும், தொடர் வெற்றிகளைப் பெற உத்தரகாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பிரார்த்தனை மேற்கொண்டார்.

நாட்டுக்கு ஆற்றிவரும் சேவை, பொது நலன் மற்றும் மேம்பாடு ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்பாகவே அவரது 25 ஆண்டுகால பொதுவாழ்வு பயணம் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மோடியின் தலைமையின் கீழ் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறுவதை நோக்கி தொடர்ந்து முன்னேறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், தேவபூமி (தெய்வங்களின் பூமி) என்று போற்றப்படும் உத்தராகண்ட் மண்ணில் இருந்து பிரதமருக்காக பிரார்த்தனை செய்வது ஒரு பெரும் பாக்கியம் என்றும் புஷ்கர் சிங் தாமி குறிப்பிட்டுள்ளார்.

Spread the love