September 2, 2026

பிஹார் ஆற்றில் தென்படும் ‘நேபாள மீன்கள்’ – அரசு எச்சரிக்கை

பாட்னா: நேபாள நாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 1,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், பிஹார் மாநிலத்தில் பாயும் ஆற்றில் வழக்கத்துக்கு மாறாக தென்படும் மீன்கள் மற்றும் அறியாத மீன்கள் குறித்து முக்கிய எச்சரிக்கையை அம்மாநில அரசு வழங்கியுள்ளது.

கடந்த 26-ம் தேதி நேபாளம் மற்றும் திபெத் நாட்டின் எல்லை பகுதியில் இமயமலையில் லாங்டாங் லிருங் சிகரத்தில் பனிமலை உடைந்து போடே கோசி, திரிசூலி, நாராயணி நதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் நேபாளத்தின் ரசுவா, தாதிங், நுவாகோட் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

கங்கையின் கிளை ஆறுகளான கோசி, கண்டக் ஆறுகள் நேபாளத்திலும், பிஹாரிலும் ஓடுகின்றன. இந்நிலையில், நேபாள பெருவெள்ளத்தை அடுத்து இந்திய எல்லையோர மாநிலமான பிஹாரில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பகஹா, வால்மீகி நகர், பெட்டியா, மோதிஹாரி உள்ளிட்ட பிஹாரின் எல்லைப் பகுதிகளில் வெள்ள நிலைமையை அம்மாநில முதல்வர் சாம்ராட் சவுத்ரி பார்வையிட்டார்.

இந்நிலையில், அம்மாநில மீன்வளத் துறை பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு எச்சரித்துள்ளது. அதன் விவரம்: சம்பரன் மாவட்டத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் வசிக்கும் மக்கள், கோபால்கஞ்ச், பகஹா, சாரன் உள்ளிட்ட பகுதிகளில் பெரிய அளவிலான வித்தியாசமான மீன்களை ஆற்றுப் பகுதியில் பிடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அந்த மீன்களை சாப்பிட்ட சிலரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்று நீரில் அழுகிய நிலையில் மனித மற்றும் விலங்குகளின் சடலங்களை பார்த்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வழக்கத்துக்கு மாறாக காணப்படும் மீன்கள் மற்றும் அறியாத மீன்களை பிடிப்பது, அதை சாப்பிடுவது, விற்பனை செய்வது, வாங்குவது போன்ற நடைமுறைகளை மக்கள் கைவிட வேண்டும்’ என்று எச்சரித்துள்ளது.

ஆற்று நீர் மாசடைந்த காரணத்தால் அதில் காணப்படும் மீன்களை பிடித்து சாப்பிடுவது உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். அதனால் அதை தவிர்க்க வேண்டும். இந்த மீன்களை சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டுமென என்று அம்மாநில அமைச்சர் நந்த் கிஷோர் ராம் தெரிவித்துள்ளார்.

Advertisement

PlayStream

சுமார் 27 கிலோ முதல் 38 கிலோ வரை, சில சமயங்களில் 45 கிலோ வரையிலான எடை கொண்ட மீன்கள் தங்கள் வலையில் கிடைப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீரின் வேகம் அதிகம் உள்ள பகுதிகளில் இந்த மீன்கள் கிடைக்கின்றன. இது எங்களுக்கு அரிதாகவே கிடைக்கும். இப்போது அதிகம் கிடைக்கிறது. இது நேபாள மீன்கள் என்று கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அந்த மீன்களை பிடித்தால் உடனடியாக அது குறித்த தகவலை மீன்வளத் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

Spread the love