லா பாஸ்: பொலிவியா தலைநகர் லா பாஸுக்கு அருகில் அந்நாட்டு கரன்சி நோட்டுகளை ஏற்றிச் சென்ற ராணுவ சரக்கு விமானம் ஓடுதளத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர். விபத்தின் போது சிதறிய பணத்தை அள்ளிச்செல்ல முயன்ற மக்களை போலீஸார் விரட்டி அடித்தனர்.
சி-130 ஹெர்குலஸ் நிறுவனத்தின் போக்குவரத்து விமானம், எல் ஆல்டோ சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையை விட்டு விலகி ஒரு குடியிருப்புப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
“விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை நாங்கள் மீட்டு வருகிறோம். இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்துள்ளனர்” என்று தேசிய தீயணைப்புத் துறையின் கர்னல் பாவெல் டோவர் செய்தியாளர்களிடம் கூறினார்,
இருப்பினும், உயிரிழந்தவர்கள் விமானத்தில் இருந்தார்களா அல்லது லா பாஸ் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையில் நின்ற கார்களில் இருந்தார்களா என்பதை டோவர் தெளிவுபடுத்தவில்லை.
லா பாஸுக்கு அருகில் உள்ள எல் ஆல்டோ நகரில் வாகனங்கள் மீது மோதிய விமானம், பின்னர் ஒரு வயலில் விழுந்தது. விமானம் விபத்துக்குள்ளானபோது அது புறப்பட்டதா அல்லது தரையிறங்கியதா என்பது குறித்து முரண்பட்ட தகவல்கள் உள்ளன. இந்த விபத்தில் குறைந்தது 15 வாகனங்கள் சிக்கின என்றும், தீயணைப்பு வீரர்கள் விமானத்தை சூழ்ந்த தீயை அணைத்தனர் என்றும் டோவர் கூறினார்.
விபத்து காரணமாக எல் ஆல்டோ விமான நிலையத்துக்கு செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

More Stories
உக்ரைன் குடியிருப்பு பகுதிகள் மீது 700 ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி ரஷ்யா நடத்திய பயங்கர தாக்குதலில் 16 பேர் உயிரிழப்பு
“ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் இறுதியானால் நான் பாகிஸ்தான் செல்வேன்” – ட்ரம்ப்
“அமெரிக்கா-ஈரான் இடையே விரைவில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை”: பாக். அமைச்சர் நம்பிக்கை