Magalir Urimai Thogai: இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 இன்று (15 ஜூன் 2026) அனைத்து பயனாளிகளின் வங்கிக் கணக்குகளிலும் வரவு வைக்கப்பட்டுள்ளது.
தவெக ஆட்சி அமைந்த பிறகு தற்போது வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாயில் இருந்து 2500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்து இருந்தார். சென்ற மாதம் ரூ. 1000 மட்டுமே வரவு வைக்கப்பட்ட் நிலையில், இந்த மாதம் ரூ. 2500 வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த மாதமும் ரூ. 1000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டு இருக்கிறது.
மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டம்
தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாண்டு ஆட்சி செய்த திமுக அரசு பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்ற சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலமாக பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் 15 ஆம் தேதி ஆன ரூ. 1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தது.
தவெகவின் தேர்தல் வாக்குறுதி
இப்படியான சூழ்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்று தவெக ஆட்சி அமைந்தால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்குப் பதிலாக, மதிப்புமிக்க மகளிர் திட்டம் மூலம் மாதம் ரூ. 2,500 பெண்களுக்கு வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்தார். அதன்படி, நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை வென்று கடந்த 10 மே 2026 அன்று தமிழ்நாட்டின் 18வது முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார்.
முதலமைச்சராக 3 திட்டங்களுக்கு முதல் கையெழுத்து
இதையடுத்து, முதலமைச்சர் விஜய்யின் முதல் கையெழுத்து மகளிருக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் வழங்கும் திட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைத்து வீடுகளுக்கும் முதல் 200 யூனிட்டுகள் வரை கட்டணமில்லா மின்சாரம், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை, போதைப்பொருளை தடுக்க சிறப்பு நடவடிக்கை உள்ளிட்ட திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். அப்போதே, தவெக அறிக்கையில் இடம்பெற்ற, பெண்கள் எதிர்பார்த்த ரூ. 2500 உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்த தனக்கு கொஞ்சம் அவகாசம் வழங்குமாறு சூழ்ச்சமாக தெரிவித்து இருந்தார்.
மகளிர் தொகைத் திட்டம் தொடரும்
இதனால், மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடருமா என்ற கேள்வி எழுந்த நிலையில், திமுகவின் அரசு திட்டங்கள் தொடரும் என்று சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்து இருந்தார். இதனையடுத்து, வழக்கம் போல கடந்த மே 15 ஆம் தேதி உரிமைத் தொகை ரூ. 1,000 வழக்கம் போல வரவு வைக்கப்பட்டது. தவெக அரசு தருவதாக சொன்ன ரூ. 2,500 வரவில்லை. தவெக அரசு பொய் சொல்லிவிட்டது என பெண்கள் திட்டி தீர்த்து விட்டனர்.
பெண்கள் அக்கவுண்ட்டில் ரூ. 1,000 வரவு வைப்பு
இந்நிலையில், ஜூன் 15 ஆம் தேதியான இன்று முதலாவது பெண்களுக்கு ரூ. 2,500 மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் என்று ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வந்தன. இதை நம்பி இல்லத்தரசிகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், இன்றைய தினம் ரூ. 1,000 மட்டுமே பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரூ. 2,500 வழங்குவது தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories
நீலகிரி மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்தடை – பொதுமக்கள் அவதி
முதலமைச்சர் விஜய் -சங்கீதா விவாகரத்து வழக்கு:வீடியோ கான்பரன்ஸ் வேண்டாம்..நீதிமன்றம் வைத்த செக்
கடலூர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த தங்கம் தென்னரசு வலியுறுத்தல்