அமமுகவுக்கு மத்திய தொகுதி ஒதுக்க வாய்ப்பு

மதுரை: மதுரை மாவட்டத்தில் அதிமுக 7 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் 70 தொகுதிகள் வரை வேட்பாளர்களை தலைமை இறுதி செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மதுரை மாவட்டத்தில் மதுரை மத்தி, மேற்கு, வடக்கு, கிழக்கு, தெற்கு, திருப்பரங்குன்றம், சோழவந்தான், மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
இதில் கடந்த தேர்தலில் அதிமுக மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், மேலூர், உசிலம்பட்டி ஆகிய 5 தொகுதிகளில் வென்றது. மீதமுள்ள தொகுதிகளை திமுக கைப்பற்றியது. இந்த முறை தவெக, நாம் தமிழர் கட்சிகள் பிரிக்கும் வாக்குகளால் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதிமுக இந்த முறை மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், வடக்கு, கிழக்கு, சோழவந்தான், திருமங்கலம், மேலூர் ஆகிய 7 தொகுதிகளில் போட்டியிடவும், எஞ்சிய 3 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், கடைசி நேரத்தில் உசிலம்பட்டி, கிழக்கு தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுடனான நிலைப் பாட்டைப் பொருத்து அதிமுக போட்டியிடவும் வாய்ப்புள்ளது.
அதிமுகவினர் பெரிதும் எதிர்பார்த்த மதுரை மத்திய தொகுதி, இந்த முறை அம முகவுக்கு ஒதுக்க வாய்ப்புள்ளது. அமமுக மேலூரை கேட்ட நிலையில், தற்போது எம்எல்ஏ உள்ளதால் அத்தொகுதியை அதிமுக விட்டுக்கொடுக்க தயாரில்லை. இதனால், மதுரை மத்தி அல்லது மதுரை வடக்கு கேட்டதாகவும், அதற்கு அதிமுக தரப்பு மதுரை மத்திய தொகுதியை விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.
அமமுக தொடங்கிய காலம் முதல் டிடிவி. தினகரனுடன் பயணிக்கும் முன்னாள் அமைச்சர் காளி முத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரைக்காக அமமுக, மதுரை மாவட்டத்தில் ஒரு தொகுதியைக் கேட்டு பெற்று அவரை வேட்பாளராக நிறுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுகவில் மத்திய தொகுதியை எதிர்பார்த்து எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஜெயபால், சமீபத்தில் அதிமுக வில் இணைந்த முன்னாள் துணை மேயர் மன்னன், எஸ்ஸார் கோபி போன்றோர் கேட்பதாகவும், ஆனால், இவர்கள் மூவருமே சமீபத்தில் கட்சியில் இணைந்ததால் இவர்களுக்கு ‘சீட்’ கொடுக்கக் கூடாது என்று மாநகர அதிமுகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அதனால், எந்த பஞ்சாயத்தும் வேண்டாம் என்று அதிமுக மேலிடம் இந்த தொகுதியை அமமுகவுக்கு விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால், இத்தொகுதி ‘சீட்’டை எதிர் பார்த்திருந்தோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அதிமுக முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம், மேற்கு, திருமங்கலம், சோழவந்தான், வடக்கு, மேலூர் ஆகிய 6 தொகுதிகளுக்கு மேலிடம் வேட்பாளர்களை இறுதி செய்து விட்டது.
மேலும், தமிழகம் முழுவதும் அதிமுக போட்டியிடக் கூடிய 70 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தயார் செய்து விட்டது. இத்தொகுதிகளில் ரூ.20 கோடி முதல் ரூ.25 கோடி
வரை செலவு செய்யக் கூடி யோருக்கு மட்டுமே ‘சீட்’ வழங்க மேலிடம் முடிவு செய்துவிட்டது. திமுகவுக்கு இணையாக தேர்தல் செலவு செய்வதற்கு பணம் பிரதானமாக தேவைப் படுவதால் உழைப்பு, தியாகத்துக்கெல்லாம் ‘சீட்’ வழங்கப்படவில்லை. ‘சீட்’ கிடைக்காதோருக்கு ஆட்சிக்கு வந்த பின் மக்களவை, உள்ளாட்சித் தேர்தல்களில் வாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளிக்கப்படும், என்றார்.

More Stories
முதல்வர் ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை: திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடருமா?
‘முதல்வர் ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து எழுவாரா?’ – நாங்குநேரி சம்பவத்தில் இபிஎஸ், விஜய் கண்டனம்
நாங்குநேரி கொலை: 6 பேரிடம் விசாரணை – பொதுமக்கள் சாலை மறியலால் போலீஸார் குவிப்பு!