புதிதாக பொறுப்புக்கு வந்திருக்கும் ‘மாண்புமிகு’ மக்கள் எல்லாம் மிகவும் துடிப்பாக களத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். மீடியா மக்களை விசில் தலைவர் சந்திக்கத் தயங்கினாலும், அவரது அரசாங்கத்தில் கோலோச்சும் ‘மாண்புமிகுக்கள்’ தைரியமாகவே மீடியாக்களை எதிர்கொள்கிறார்கள். மனதில் பட்டதை பட்டெனப் பேசியும் சிலர் ‘பல்ப்’ வாங்குகிறார்கள். இந்த நிலையில், ‘வளத்’ துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் தென்மாவட்ட ’மாண்புமிகுவானர்’, திடீர் திடீரென குவாரிகளுக்குள் புகுந்து ஆய்வுகளை நடத்தி குவாரி முதலைகளை அலறவிடுகிறாராம்.
அதிகாரிகள் உள்ளிட்ட யாருக்கும் தகவல் தெரிவிக்காமலேயே இந்த அதிரடிகளை அரங்கேற்றுகிறாராம். ஆனால், அருப்புக்கோட்டை பகுதிக்கு ‘அண்ணன்’ சர்ப்ரைஸ் ஆய்வுக்குப் போனபோது, ‘மருத்துவ முகாமிற்கு வருகை தரும் மாண்புமிகு அமைச்சர் அவர்களே’ என கட்சியினர் ஃபிளெக்ஸ் வைத்து பிரமாதப்படுத்தியது என்ன ‘சர்ப்ரைஸ்’ என்று தெரியவில்லை. அன்றைய தினம், ’காமராஜரின்’ மாவட்டத்தில் விதிகளை மீறியதாக 23 குவாரிகளை இழுத்து மூடி இருப்பதாக மீடியாக்களுக்கு ஒற்றை வரி செய்தி சொன்னார் ‘மாண்புமிகு’.
ஆனால், ‘பாளையம்’ பார்டரில் லைசென்ஸ் காலாவதி ஆனதால் ஏற்கெனவே மூடப்பட்ட 12 குவாரிகளையும் சேர்த்து ‘மாஸாக’ இருக்கட்டுமே என்று கணக்கு கொடுத்து விட்டாராம்.
இதனிடையே, எங்கெல்லாமோ குவாரிகளுக்கு ஆய்வுக்குப் போகும் ‘மாண்புமிகுவுக்கு’ தூங்கா நகர் மாவட்டத்தின் ‘சோழன் வந்த’ தொகுதிக்குள் சூரியக் கட்சியின் ‘கீர்த்தி’ நிறைந்த முன்னாள் மாண்புமிகுவின் கல் குவாரிகளில் நடக்கும் அத்துமீறல்கள் எல்லாம் உங்காளுக்கு கண்ணுக்குத் தெரியலையா என்று சூரியக் கட்சியினரே விசில் பார்ட்டிகளை சூடேற்றி வருகிறார்களாம்.

More Stories
தமிழகத்தில் நடக்கும் குதிரை பேரத்தை தடுத்து நிறுத்த கோரி ஆளுநரிடம் அதிமுக மனு
அஜித் தாயார் மறைவு: முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் இரங்கல்
“அதிமுகவில் பிரிவை ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை” – லீமா ரோஸ் விளக்கம்