November 13, 2026

மின்வாரிய ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை அல்லது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அவர்கள் ஓய்வு பெறும் நாளன்று பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டு, உரிய நிலுவைத் தொகையைக் கழித்த பிறகு மீதமுள்ள ஓய்வூதியப் பணிக்கொடை வழங்கப்படும் என வாரியம் உத்தரவிட்டுள்ளது

இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் ,                                                                                   பல்வேறு விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வாரியத்தில் ஒழுங்கு நடவடிக்கைகள் அல்லது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போதே ஓய்வு பெறும் வயதை எட்டி பணி ஓய்வு பெற அனுமதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இறப்பு மற்றும் ஓய்வூதிய பணிக்கொடைத் தொகையை முழுமையாக நிறுத்தி வைப்பதற்குப் பதிலாக, அவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய குறிப்பிட்ட தொகையை மட்டும் பிடித்தம் செய்துவிட்டு மீதமுள்ள தொகையை விடுவிக்குமாறு கோரிக்கைகள் பெறப்பட்டு வந்தன.

இக்கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு தற்போதைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, குற்றவியல் புகார் விசாரணை நிலுவையில் உள்ள ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு ஏதுவாக, அவர்களின் பணியிடை நீக்க உத்தரவு அவர்கள் பணி ஓய்வு பெறும் தேதியன்றே ரத்து செய்யப்படும். மேலும், ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் முழுமையாக முடிவடைந்த பிறகே இறப்பு மற்றும் ஓய்வு கால பணிக்கொடைகள் வழங்கப்படும். ஏனைய வழக்குகளைப் பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட ஊழியர்களால் மின்வாரியத்திற்கு ஏதேனும் நிதி இழப்பு ஏற்பட்டிருந்தாலோ அல்லது வசூலிக்கப்படாத நிலுவைத் தொகை இருந்தாலோ, அவற்றைக் கழித்த பின்னர் எஞ்சிய ஓய்வூதிய பணிக்கொடைத் தொகை அவர்களுக்கு வழங்கப்படும் என அந்த உத்தரவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Spread the love