மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்

பாட்னா: வரும் மாநிலங்களவை தேர்தலில் பிஹாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 2 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இதில் ஒன்றில் மத்திய அமைச்சர் ராம்நாத் தாக்கூர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. மற்றொரு இடத்துக்கு இன்னும் வேட்பாளர் உறுதியாகவில்லை.
இந்நிலையில் நிதிஷ் குமார் முதல்வர் பதவியிலிருந்து விலகி, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவார் எனவும் அவரது மகன் நிஷாந்த் குமார் துணை முதல்வராகப் பொறுப்பேற்பார் எனவும் பாஜகவை சேர்ந்த ஒருவர் அடுத்த முதல்வராக பதவியேற்பார் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தள உயர்மட்ட தலைவர்கள் மத்தியில் ரகசிய கூட்டம் நடந்து வருகிறது.
நிதிஷ் குமாரை மாற்றும் நடவடிக்கை 2025 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிதிஷ் குமாரின் சாதனைகளை கருத்தில் கொண்டு அவசர கதியில் அந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 75 வயதான நிதிஷ் குமார், 10 முறை முதல்வராக பதவியேற்று சாதனை படைத்துள்ளார். பிஹாரில் என்டிஏ அல்லது மகா கூட்டணி என அவர் எதில் இருந்தாலும் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றுள்ளார்.
கடந்த 2025ல் அவரது அரசுக்கு எதிரான அலை வீசுவதாக கூறப்பட்டபோது, பெண்களுக்கு நிதியுதவி, பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள், மது விலக்கு போன்ற திட்டங்களால் நிதிஷ் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். எனவே இத்தேர்தலில் நிதிஷ் குமார் போட்டியிடுகிறாரா என்பது இன்று தெரியவரும்.

More Stories
ஈரான் விவகாரம் | “சுயாட்சி உரிமையில் பிரதமர் மோடி சமரசம்” – ராகுல் காந்தி
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதாக நிதிஷ் குமார் அறிவிப்பு
இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்!