April 30, 2026

மெட்ரோ பயணிகளே அலர்ட்! நாளை முதல் பழைய கார்டுகள் செல்லாது; உடனே இதைச் செய்யுங்க!

சென்னை மெட்ரோவில் நாளை முதல் பழைய கார்டுகள் செல்லாது; பயணிகள் பழைய கார்டு இருப்பை சிங்கார சென்னை அட்டைக்கு இலவசமாக மாற்றிக்கொள்ள மெட்ரோ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL) வெளியிட்டுள்ளது. இதன்படி, மே 1-ம் தேதி முதல் பழைய வகை மெட்ரோ ஸ்மார்ட் கார்டுகள் முழுமையாகச் செயலிழக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கார சென்னை அட்டை கட்டாயம்

சென்னை மெட்ரோவில் இனி சிங்கார சென்னை அட்டை (National Common Mobility Card – NCMC) மட்டுமே ஒரே பயண அட்டையாக ஏற்றுக்கொள்ளப்படும். நாளை முதல் பழைய கார்டுகளைப் பயன்படுத்தி ரயில் நிலைய நுழைவு வாயில்களில் (Automatic Gates) நுழைய முடியாது. இதுகுறித்து அண்மையில் சென்னை மெட்ரோ நிர்வாகம் ஒரு பதிவினை பதிவிட்டது.

  

அதில்,”சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ இரயில்களில் பயணிக்க சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டையுடன் கூடுதலாக 14.04.2023 முதல் “சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது போக்குவரத்து அட்டை)” அறிமுகப்படுத்தியது. இந்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, இந்தியா முழுவதும் உள்ள பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் தடையற்ற பயணத்தை உறுதி செய்யும் வகையில், 01.05.2026 முதல் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் “சிங்கார சென்னை அட்டைக்கு (தேசிய பொது போக்குவரத்து அட்டை)” முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது.

எனவே, மெட்ரோ இரயில்களில் பயணம் செய்யவும், மெட்ரோ வாகன நிறுத்தங்களை பயன்படுத்தவும், பயணிகள் தங்களது பழைய பயண அட்டையில் மீதமுள்ள தொகையை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி (Mobile App) மூலம் பெறப்படும் QR Stored Value Pass (SVP) அல்லது தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, நம்பகமான பயண அனுபவத்தை வழங்க சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் உறுதியுடன் உள்ளது. இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம். உங்கள் மேலான ஆதரவைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்” தெரிவித்தது.

பழைய கார்டு பேலன்ஸ் என்னவாகும்?

பழைய கார்டில் இருப்புத் தொகை வைத்துள்ள பயணிகள் கவலைப்படத் தேவையில்லை.
பயணிகள் தங்கள் பழைய கார்டை மெட்ரோ ரயில் நிலைய கவுண்டர்களில் ஒப்படைத்து, அதில் உள்ள தொகையை அப்படியே புதிய சிங்கார சென்னை அட்டைக்கு மாற்றிக் கொள்ளலாம்.
பழைய கார்டுக்கான டெபாசிட் தொகையும் புதிய கார்டில் ஈடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அட்டையின் சிறப்பம்சங்கள்

  • இந்த ஒரே அட்டையை வைத்து சென்னை மெட்ரோ மட்டுமின்றி, மாநகரப் பேருந்துகள் மற்றும் இந்தியாவின் பிற நகரங்களில் உள்ள மெட்ரோ ரயில்களிலும் பயணிக்கலாம்.
  • 20% பயணக் கட்டணத் தள்ளுபடி இந்த புதிய அட்டையிலும் தொடர்ந்து கிடைக்கும்.
  • மெட்ரோ செயலி மூலம் QR பயணச் சீட்டுகளைப் பெறுபவர்களுக்கு இந்த மாற்றம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
Spread the love