துபாய்: நடப்பு மகளிர் ஆசிய கோப்பை தொடரில் பட்டம் வென்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. இருப்பினும் பாகிஸ்தானை சேர்ந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரான மோசின் நக்வியிடமிருந்து வெற்றிக் கோப்பையை பெற மறுத்தனர் இந்திய வீராங்கனைகள்.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மகளிர் ஆசிய கோப்பை தொடருக்கான இறுதிப் போட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. டி20 பார்மெட்டில் இந்த தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிகள் பலப்பரீட்சை செய்தன.
இந்திய அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்தது. முதல் விக்கெட்டுக்கு ஷெபாலி வர்மாவும், ஸ்மிருதி மந்தனாவும் 129 ரன்கள் சேர்த்தனர். அது இந்திய அணிக்கு சிறந்த தொடக்கமாக அமைந்தது. ஷெபாலி, 39 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்தார். ஸ்மிருதி, 39 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் 14, ரிச்சா கோஷ் 17, தீப்தி சர்மா 5, கமலினி 15, பார்தி 2 ரன்கள் எடுத்தனர்.
184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இலங்கை அணி விரட்டியது. அந்த அணி 20 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் சமாரி 36, நிலாக்ஷிகா சில்வா 22, விஷ்மி 20 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் இந்தியா 72 ரன்களில் வெற்றி பெற்றது. ஆசிய கோப்பை தொடரை 8-வது முறையாக இந்திய கிரிக்கெட் அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி சார்பில் ஸ்ரீ சரணி 4 மற்றும் தீப்தி சர்மா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். கிரந்தி, ஷெபாலி, பிரேமா ராவத் ஆகியோர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர். இதில் பிளேயர் ஆப் தி மேட்ச் விருது ஷெபாலிக்கு அறிவிக்கப்பட்டது.
மோசின் நக்வி வசமிருந்து கோப்பையை பெற மறுத்த இந்திய மகளிர் அணி
வெற்றிக்கு பிறகு பரிசளிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது வெற்றிக் கோப்பையை பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வி வசமிருந்து பெற இந்திய வீராங்கனைகள் மறுத்துவிட்டனர். ‘கோப்பையை நான் தான் வழங்குவேன்’ என மோசின் நக்வியும் தனது உறுதியை வெளிப்படுத்தினார். இறுதியில் பட்டம் வென்ற இந்திய அணி, கோப்பையை பெறாமல் வெறுங்கையோடு தொடரை முடித்தது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இந்திய ஆடவர் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அப்போதும் இதே காரணத்தால் இந்திய அணிக்கு கோப்பை கிட்டவில்லை.

More Stories
மகளிர் ஆசிய கோப்பை டி20 இறுதிக்கு முன்னேறியது இந்தியா!
பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி 453 ரன்கள் குவிப்பு
பாரா உலக வில்வித்தை போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் இந்தியா 2 தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது