
சென்னை: திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயதான பார்த்திபன், சென்னையில் மின்சாதனப் பழுது நீக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் அவருக்கு முதுகெலும்பைப் பிளப்பது போன்ற தாங்க முடியாத வலியும், கடுமையான வயிற்று வலியும் ஏற்பட்டது.
தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், இதயத்திலிருந்து உடலின் முக்கிய உறுப்புகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் பெருந்தமனி வெடித்திருப்பது கண்டறியப்பட்டது.
மேலும், சுமார் 1.5 லிட்டர் ரத்தம் கசிந்து நுரையீரல் மற்றும் மண்ணீரலை அழுத்தியதால், அவர் மரணத்தின் விளிம்புக்கு தள்ளப்பட்டார். தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைக்கு ரூ.15 லட்சம் முன்பணம் கேட்கப்பட்டதுடன், உயிருக்கு உத்தரவாதமும் அளிக் கப்படாததால், நம்பிக்கையிழந்த பார்த்திபன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையை நாடினார்.
இதையடுத்து, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ரத்த நாள அறுவை சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் க.இளஞ்சேரலாதன் தலைமையில், த.ராஜ்குமார், வி.ராதாகிருஷ்ணா, வி.ஜி.விக்ரமன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டனர்.
சில மணி நேரங்களிலேயே விலையுயர்ந்த செயற்கை ரத்தக்குழாய் உறை மற்றும் தேவையான ரத்தத்தை ஏற்பாடு செய்தனர். முதலில் பாதிக்கப்பட்ட இரைப்பை, குடல் மற்றும் சிறுநீரகங்களுக்கு ரத்த ஓட்டத்தைச் சீர்செய்ய மாற்றுப் பாதை உருவாக்கப்பட்டது.
தொடர்ந்து `கேத் லேப்’வசதியைப் பயன்படுத்தி, நெஞ்சுக்கூடு முதல் வயிற்றுப் பகுதி வரை பெரிய உறை குழாய் (ஸ்டன்ட்) பொருத்தப்பட்டு, ரத்தக் கசிவு நிறுத்தப்பட்டது.
எந்நேரமும் கிருமி தொற்று, குடல் மற்றும் சிறுநீரக ரத்த ஓட்டத்தை பாதிக்கும் அபாயம் இருந்த போதிலும், ஸ்டான்லி மருத்துவமனை ரத்தநாள அறுவை சிகிச்சைத் துறை மருத்துவர்கள் பார்த்திபன் உயிரை காப்பாற்றினர். இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.30 முதல் 40 லட்சம் செலவாகும் நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் முதல்வர் காப்பீடு திட்டத்தின்கீழ் இலவசமாக முடிக்கப்பட்டது.
இதேபோல், காசநோயால் பாதிக்கப்பட்டு ரத்த வாந்தியுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட குப்பம்மாள் என்ற பெண்ணுக்கும் ஸ்டான்லி மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர். அவருக்குப் பெருந்தமனி வெடித்து, நுரையீரல் மற்றும் உணவுக்குழாய் அழுத்தி, நெஞ்சுவலி ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
நுணுக்கமான முறையில் காலின் ரத்த நாளம் வழியாக நெஞ்சுக்கூட்டுப் பெருந்த மனிக்கு உறை குழாய் பொருத்தப்பட்டு அவரது உயிரையும் ரத்த நாள அறுவை சிகிச்சைத் துறை மருத்துவர்கள் காப்பாற்றினர்.
பல லட்சம் ரூபாய் வரை செலவாகும் மருத்துவ சிகிச்சையை தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எளிய மக்களுக்குச் சாத்தியமாக்கிய ரத்தநாள அறுவை சிகிச்சைத் துறை மருத்துவர்களை, மருத்துவமனை முதல்வர் டாக்டர் அரவிந்த் வெகுவாகப் பாராட்டினார்.

More Stories
பிப்.23 முதல் வீடு வீடாகப் பரப்புரை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகம் வளர்ச்சி மாநிலமாக தொடர துணை நிற்க வேண்டும்: ‘சாம்பியன்ஸ் ஆஃப் தமிழ்நாடு’ விழாவில் இளைஞர்களுக்கு முதல்வர் அழைப்பு