August 1, 2026

ராமர் கோயில் காணிக்கை திருட்டு: நாடக வடிவில் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் நாடகம் அரங்கேற்றி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், மாணவர்கள் மீதான நடவடிக்கையை கண்டித்து அமித் ஷா ராஜினாமா செய்யவும் வலியுறுத்தினர்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் 10ம் நாளான இன்று, நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மகர் த்வார் பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சுயேட்சை எம்பி பப்பு யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, காவி உடை அணிந்து போலி சாமியார் வேடத்தில் வந்த பப்பு யாதவ், உண்டியலை வைத்து பணம் வசூலிப்பது போலவும், பிறகு அவற்றை திருடிக்கொள்வது போலவும் நாடகம் ஒன்றை நடத்தினார். உண்டியலில் ராகுல் காந்தி காணிக்கை செலுத்துவது போல நாடகம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து, ஜூலை 20 அன்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய பேரணியில் போராட்டக்காரர்களுக்கு எதிராக காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து, நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பங்கேற்றனர். அப்போது, காணிக்கை திருட்டைக் கண்டித்தும், அமித் ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

அவர்களை அமைதிப்படுத்துவதற்கான முயற்சிகளை சபாநாயகர் ஓம் பிர்லா மேற்கொண்டார். எனினும், முயற்சி பலனளிக்காததை அடுத்து அவையை பகல் 12 மணிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

இதேபோல், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவையின் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

‘நிதானத்தை இழக்கும் காங்கிரஸ்’

அதிகாரம் இல்லாததால் காங்கிரஸ் கட்சி நிதானத்தை இழப்பதாக பாஜக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, “அடிப்படையற்ற அர்த்தமற்ற கருத்துக்களைத் தெரிவிக்கும் வழக்கம் அவருக்கு (ராகுல் காந்திக்கு) நீண்ட காலமாகவே இருக்கிறது.

காங்கிரஸ் கட்சி கடந்த 12 ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லாததே அவரது தற்போதைய மனநிலைக்குக் காரணம். அதிகாரத்தை இழந்த நிலையில், காங்கிரஸ் கட்சியினர் நிதானத்தை இழப்பது போல தெரிகிறது.” என விமர்சித்துள்ளார்.

Spread the love