June 30, 2026

‘ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரத்தால் அயோத்திக்கு பக்தர்கள் வருகை, காணிக்கை குறைந்தது’

துறவி ராம்தாஸ் பால் யோகி குற்றச்சாட்டு

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்​டால், சாதுக்​கள், மடா​திப​தி​கள் கோபம் அடைந்துள்​ளனர்.

அயோத்​திக்கு வரும் பக்​தர்​கள் அதைச் சுற்​றி​யுள்ள கோயில்​கள், மடங்​களி​லும் தரிசனம் செய்து காணிக்​கைகளை அள்ளி வழங்குவது வழக்​கம். ஆனால், ராமர் கோயில் காணிக்கை திருட்டால், பக்​தர்​கள் வருகை மற்​றும் காணிக்​கைகள் குறைந்துள்​ளன.

இதுகுறித்து மூத்த துறவி ராம்தாஸ் பால் யோகி மகா​ராஜ் கூறியதாவது: “பக்​தர்​கள் கோபத்​தில் உள்​ளனர். பக்​தர்​கள் வருகை​யின் எண்​ணிக்​கை, காணிக்​கைகள் குறைந்​துள்​ளது. இது அயோத்தி முழு​வதை​யும் பாதிக்​கிறது. ராமர் கோயிலுக்கு வருபவர்​கள் எங்​கள் கோயிலுக்​கும் வரு​வார்​கள். நாங்​கள் சரயு நதிக் ​கரை​யில் இருப்​ப​தால், மாலை நேர ஆரத்​திக்கு ஏராள​மான பக்​தர்​கள் வரு​வார்​கள்.

ஆனால் இப்​போது அயோத்தியில் வருகை குறைந்​துள்​ளது. திருடினால் எப்​படி காணிக்கை கிடைக்​கும் ? ஒட்​டுமொத்த அயோத்​தி​யும் இதற்​கான தண்​டனையை அனுபவிக்​கிறது. பகவான் ராமர் இந்​தத் திருடர்​களை ஒரு ​போதும் மன்​னிக்க மாட்டார்.

சமாஜ் ​வாதி தலை​வர் அகிலேஷ் இந்த விஷ​யத்தை வெளிப்படுத்திய போது​தான் அனை​வரும் அறிந்​தனர். ஆனால், ராமர் கோயில் நிர்​வாகி சம்​பத் ராய், கணக்கு சரி​யாக இருக்கிறது. அப்​படிப்​பட்ட சம்​பவம் எது​வும் நடக்​க​வில்​லை. குழப்பம் ஏற்​படுத்​துகின்​றனர்” என்று கூறி கோயி​லில் நடப்​பதை ஒப்​புக்​கொள்ள மறுத்​து​விட்​டார்.

இதற்கு முன்பு மிகப்​பெரிய நில மோசடி நடந்​துள்​ளது. ஒரு கோடி ரூபாய் மதிப்​புள்ள நிலம் 25 கோடி ரூபாய்க்கு வாங்​கப்​பட்​டது. அப்போதும் கூட இவர்​கள் மீது எந்த நடவடிக்​கை​யும் எடுக்கவில்லை. இதில் சிறிய மீன்​கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். பெரிய மீன்​கள் தப்​பிக்க விடப்​பட்​டுள்​ளனர்.

இன்​றும் கூட, அரசு ஆதரவு பெற்ற சாமி​யார்​கள், துப்​பாக்கி ஏந்திய பாது​காவலர்​களு​டன் வலம் வரும் சாமி​யார்​கள் இது குறித்துப்​ பேசத்​ தயா​ராக இல்​லை. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

ஆதாரங்கள் அழிப்பு; ரூ.79 லட்சம் பறிமுதல்: ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரத்தில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் ஆதாரங்களை அழித்தது தெரிய வந்துள்ளது. முக்கியக் குற்றவாளியான டின்னு யாதவ் (எ) ராம் ஷங்கர் யாதவ் உள்ளிட்ட 8 பேர் இந்த வழக்கில் கைதாகினர். கடந்த ஜூன் 6ம் தேதி திருட்டு விவகாரம் வெளிவந்த பின்னர், அறக்கட்டளை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர்.

அதற்குள் குற்றம் சாட்டப்பட்டவர்கள், வாட்ஸ்- அப் போன்ற செயலிகளில் இருந்த தகவல்களை அழித்துள்ளனர். கைப்பேசிகளை ‘பார்மட்’ செய்து தரவுகளை அழித்துள்ளனர். இந்நிலையில், அயோத்தி போலீஸார் நேற்று சம்பந்தப்பட்டவர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இதில், நேற்று மாலை வரை ரூ.79 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.

டின்னு யாதவும் அவரது கூட்டளிகளும் ராமர் கோயிலில் செல்வாக்குடன் இருந்துள்ளனர். இந்த வழக்கில் வங்கி அதிகாரிகளும் விசாரணையில் உள்ளனர். கடந்த 45 நாட்களில் அனைத்து சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளையும் போலீஸார் கைப்பற்றி உள்ளனர். அதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், கோயிலில் திருடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. எனினும், எவ்வளவு காலமாக இந்த காணிக்கைப் பணம் திருடப்பட்டது என்று தெரியவில்லை. ஏனெனில் 45 நாட்களுக்கு முந்தைய கேமரா பதிவுகள் சேமிப்பில் இல்லை.

இதற்கிடையில், அறக்கட்டளை நிர்வாகிகள், குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்திருப்பது குறித்து உத்தர பிரதேச அரசின் எஸ்ஐடி தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் அடுத்த கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ளது. அதில் புதிய பொதுச்செயலாளர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

Spread the love