நாட்டில் உள்ள ஏழை மக்கள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயன்பெறும் வகையில், ஆயுஷ்மான் பாரத் – பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) காப்பீடுக்கான தொகையை தற்போதுள்ள ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்த மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு, செப்டம்பர் 23-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால், ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டது. நாட்டில் குறைந்த வருவாய் உள்ள 40% குடும்பங்களுக்கு, குறிப்பாக ஏழைகள், சமூகத்தில் நலிவடைந்த மக்கள் உள்ளிட்டோருக்கு மருத்துவ சிகிச்சை, 2-ம் கட்ட சிகிச்சை, அறுவை சிக்சை செய்ய இலவச மருத்துவக் காப்பீடு அளிக்கும் நோக்கில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.
இந்தத் திட்டத்தில் சேரும் குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும். இந்த காப்பீட்டின் மூலம் குறிப்பிட்ட மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சை எடுக்கலாம். மருத்துவ ஆலோசனை, மருந்துகள், நோய் கண்டறிதல், அறுவை சிகிச்சை, ஐசியு அறை, உறுப்பு மாற்று சிகிச்சை, மருத்துவமனை தங்கும் வசதி, உணவு ஆகியவை இந்தக் காப்பீட்டில் செய்துகொள்ள முடியும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பாக எடுக்கப்படும் சிகிச்சை, அனுமதிக்கப்பட்டு 15 நாட்கள் சிகிச்சை செலவுகள் ஆகியவை இந்தக் காப்பீட்டில் அடங்கும்.
இந்தக் காப்பீடு வைத்திருப்பவர், ஏற்கெனவே தனக்கு இருக்கும் நோய்களுக்கும் சிகிச்சை எடுக்கலாம், குடும்பத்தின் அளவு, வயது வரம்பு, பாலினம் இதில் தடையில்லை. நாடு முழுவதும் குறிப்பிட்ட அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் இந்தக் காப்பீடு செல்லுபடியாகும்.
புதிய பரிந்துரைகள் என்னென்ன?
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலனுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தனது 172 அறிக்கையில், ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு தொகையை தற்போதுள்ள ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் ஆக உயர்த்த மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
தற்போது காப்பீட்டுத் தொகையான ரூ.5 லட்சத்தால், சில முக்கியமான நோய்களில் இருந்து மக்களைக் காப்பதும், சிகிச்சையளிப்பதும் கடினமாக இருக்கிறது. குறிப்பாக கல்லீரல் மாற்று சிகிச்சை, சிக்கலான இதய அறுவை சிகிச்சை, இமுனோதெரபி சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்படும் என்பதால் காப்பீடு தொகையை ரூ.10 லட்சமாக அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பரிந்துரைகளின் முழு விவரம்:
1. காப்பீடு தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும்.
2. அதிகம் செலவாகும் சில அரிதான நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைகளுக்கு சிறப்புச் சிகிச்சைத் தொகுப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும்.
3. மிகவும் நுணுக்கமான, சிக்கலான சிகிச்சை மற்றும் மேம்பட்ட மருத்துவ சிகிச்சைகளுக்கு கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும்.
4. ஒரு சிகிச்சைக்கு தேவையான நிதியை பலரிடம் இருந்து பெற்று சிகிச்சை பெறும் நிதி முறையை செயல்படுத்த வேண்டும்.
5. மருத்துவமனை மற்றும் மருத்துவ உபகரணங்கள், தயாரிப்பாளர்களிடம் விலை நிர்ணயத்தில் பேச்சு.
6. மாநிலங்களுடன் இணைந்து நிதியுதவி அளித்தல்.
7. பணமில்லா சிகிச்சைக்கு முன்கூட்டியே அனுமதி பெறுவதற்கான ஆறு மணி நேர காலக்கெடுவை கண்டிப்பாக அமல்படுத்துதல்.
8. தேவையற்ற காலதாமதம் செய்யும் காப்பீடு நிறுவனங்கள், மருத்துவமனைகள் மீது அபராதம் விதித்தல்.
9. காப்பீடு திட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் முறையான தணிக்கை முறையை செயல்படுத்துதல்.
10. குறைந்த இடர்கொண்ட சிகிச்சை முறைகளுக்கு அனுமதியை தானியங்கி மூலம் அளித்தல்.
11. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) முறையை பயன்படுத்துவதன் மூலம் காப்பீடு திட்டத்துக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு சிகிச்சைக்கான விரைவான ஒப்புதல் மற்றும் வெளிப்படைத் தன்மையை அதிகப்படுத்துதல்.
இந்தப் பரிந்துரைகளை மத்திய அரசுக்கு சுகாதாரத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அனுப்பி வைத்துள்ளது.
காப்பீடு திட்டமும் நடைமுறையும்
ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் கீழ் இதுவரை 44 கோடி காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் இதுவரை 12 கோடி பேர் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 2026 ஜனவரி 31-ம் தேதி நிலவரப்படி, 36 மாநிலங்களில் ஆயுஷ்மான் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.1.69 லட்சம் கோடி மதிப்பில், 11.46 கோடி பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
70 வயது மற்றும் அதற்கு அதிகமான வயதுடைய ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இந்தத் திட்டத்தின் கீழ் காப்பீடு பெறத் தகுதியுடையவர் ஆவர். இதற்கு வருமான வரம்போ அல்லது ஏற்கெனவே காப்பீடு வைத்திருக்கிறாரா என்ற தகுதி இல்லை. அது மட்டுமல்லாமல், மத்திய அரசு சுகாதாரத் திட்டம் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கான மருத்துவத் திட்டம் போன்ற அரசின் மருத்துவ சிகிச்சை திட்டங்களில் சேர்ந்திருந்தாலும், இந்த ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டில் சேருவதற்கு தடையில்லை. ஆனால், ஏதேனும் ஒரு திட்டத்தில்தான் சிகிச்சை பெற இயலும்.
இந்தத் திட்டத்தில் சேருபவரின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, வயது ஆகியவற்றுக்கு கட்டுப்பாடு இல்லை. ஏற்கெனவே நோய் இருப்பவரும் காப்பீடு கிடைத்த முதல் நாளில் இருந்து சிகிச்சை பெறலாம்.
ஆயுஷ்மான் காப்பீடு பெற தேவையான ஆவணங்கள்:
1. ஆதார் கார்டு
2. ரேஷன் கார்டு
3. மொபைல் எண்
4. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
5. மத்திய அரசு அல்லது மாநில அரசின் பிற அடையாள அட்டை
6. தொழிலாளர் அட்டை (இருந்தால் மட்டும்)
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
பிஎம்-ஜே போர்டலில் சென்று தகுதியுடைய அனைவரும் இதில் விண்ணப்பிக்கலாம். பிஎம்-ஜே போர்டலுக்கு சென்று, பயனாளர் பட்டனை அழுத்தி, பக்கத்துக்குள் செல்ல வேண்டும். அதில் உங்களின் செல்போன் எண்ணைக் குறிப்பிட்டால், ஓடிபி எண் செல்போனுக்கு அனுப்பி வைக்கப்படும். இதை வைத்து லாகின் செய்து செல்லலாம்.
அதன்பின், பிஎம் ஜே பிரிவுக்குள் சென்று மாநிலம், மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆதார் எண்ணை தேடுதல் பிரிவில் பதிவிட்டு தேடினால், உங்களுடைய விவரங்கள் அதில் கிடைக்கும், அதை உறுதி செய்ய வேண்டும். அதன்பின் புகைப்படத்தை அதில் பதிவேற்றம் செய்து, நம்முடைய ஊரின் பின்கோடு, ஓடிபி எண்ணை பதிவிட்டால் நம்முடைய விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
விண்ணப்பித்த 24 மணி நேரத்துக்குப் பின், மீண்டும் இந்த பிஎம்ஜே தளத்துக்கு வந்து செல்போன் எண் மூலம் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ள முடியும்.

More Stories
வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படித்தவர்களுக்கான கட்டாய தகுதித் தேர்வில் 12% பேர் மட்டுமே தேர்ச்சி
புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை பாதுகாப்பு பணியில் 12,000 போலீஸ்
பெங்களூருவில் உலக திருக்குறள் மாநாடு கோலாகலம்: தேசிய நூலாக அறிவிக்கக் கோரி தீர்மானம்