
முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் கடாபி
திரிபோலி: வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் கடந்த 1969-ம் ஆண்டு முதல் மொம்மர் கடாபி ஆட்சி செய்து வந்தார். பல்வேறு அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த 2011-ம் ஆண்டு உள்நாட்டுக் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது சர்வாதிகார அதிபர் கடாபி பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதன் மூலம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு லிபியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கடாபியின் 2-வது மகன் சைப் அல் இஸ்லாம் கடாபி (53). இவர் லிபியாவின் ஜின்டான் நகரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தார். கடாபிக்கு எதிராக மக்கள் கலவரத்தில் ஈடுபட்ட போது மனித குலத்துக்கு எதிராக பல்வேறு கொடுமைகளை செய்ததாக சைப் அல் இஸ்லாம் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து இவரை தேடப்படும் குற்றவாளியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டின் தோட்டத்தில் சைப் அல் இஸ்லாம் இருந்தபோது, 4 மர்ம நபர்கள் திடீரென வீட்டுக்குள் புகுந்தனர். வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்கள் அனைத்தையும் செயலிழக்க செய்தனர்.
பின்னர் சைப் அல் இஸ்லாம் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதில் சைப் உயிரிழந்தார். இத்தகவலை சவுதியின் அல் அரேபியா தொலைக்காட்சி வெளியிட்டது. அவரை சுட்டுக் கொன்றவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.

More Stories
பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு! 10 பேர் பலி
செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு: இந்தியாவுக்கு ஐ.நா. தலைவர் பாராட்டு
“இந்தியா – பாக். போரை நிறுத்தியது நானே!” – 90வது முறையாக ட்ரம்ப் தம்பட்டம்