நவ.13 முதல் மீன்பிடி அனுமதி இல்லை!சென்னை, நவ.11: வங்கக்கடலில் நவம்பர் 13 வெள்ளிக்கிழமை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது மேலும் வலுப்பெறக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டல அலுவலகம் தெரிவித்துள்ளதாக மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
இதையடுத்து, மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கிழக்குக் கடற்பகுதிகளில் மீன்பிடிக்கும் அனைத்துப் படகுகளும் நவம்பர் 12 வியாழக்கிழமை இரவுக்குள் கரை திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் மட்டுமின்றி, தினசரி கடலுக்குச் செல்லும் நாட்டுப் படகுகள் உள்ளிட்ட அனைத்து வகையான மீன்பிடிப் படகுகளுக்கும் இந்த அறிவுறுத்தல் பொருந்தும். கரை திரும்பும் படகுகளை மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் வழக்கமான மீன் இறங்குதளங்களில் பாதுகாப்பாக நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நவம்பர் 13 முதல் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிப் படகுகளுக்கு மீன்பிடி அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் வானிலை மாற்றங்களை முன்னிட்டு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. கடலில் உள்ள படகுகள் அனைத்தும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பாதுகாப்பாகக் கரையை அடைவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் வானிலை எச்சரிக்கைகளையும், மீன்வளத்துறை வழங்கும் பாதுகாப்பு அறிவுரைகளையும் மீனவர்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். அனைத்து படகுகளும் பாதுகாப்பாகத் திரும்பி நிறுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்பதும் துறையின் வேண்டுகோளாகும். வானிலை நிலவரத்துக்கேற்ப வெளியாகும் அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் மீனவர்கள் தொடர்ந்து கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

More Stories
“தவெக 6 மாத காலமாக தந்து வருவது துயர ஆட்சியே” – பழனிசாமி விமர்சனம்
“தமிழகத்தில் ‘ரத்து’ அரசு நடத்தும் தவெக” – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்
11-11-2026