May 29, 2026

வடபழனி கோயி​லில் வைகாசி விசாக தேரோட்டம் – ‘அரோக​ரா’ முழக்​கத்​துடன் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

சென்னை: வடபழனி முரு​கன் கோயி​லில், வைகாசி விசாக திரு​விழா தேரோட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில் ஏராள​மான பக்தர்கள் திரளாக பங்​கேற்​று, ‘அரோக​ரா’ முழக்​கத்​துடன் தேரை வடம் பிடித்து இழுத்​தனர்.

சென்​னை​யின் முக்​கிய ஆன்​மிகத் தலங்​களில் ஒன்​றான வடபழனி முரு​கன் கோயி​லில் வைகாசி விசாக பிரம்​மோற்​சவத் திரு​விழா ஒவ்வோர் ஆண்​டும் விமரிசை​யாக கொண்​டாடப்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில், நடப்​பாண்​டுக்​கான திரு​விழா கடந்த 21-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது.

10 நாட்​கள் நடை​பெறும் இவ்​விழா​வில், நாள்​தோறும் வடபழனி ஆண்​ட​வருக்கு சிறப்பு அபிஷேகங்​களும், பல வகை​யான அலங்​காரங்களும் செய்​யப்​பட்டு பூஜைகள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன. இந்​நிலை​யில் விழா​வின் முக்​கிய நிகழ்​வான தேரோட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதையொட்டி காலை 7 மணி அளவில் மங்கள இசை முழங்க, யாக​சாலை பூஜை முடிந்து முருக பெரு​மானுக்கு தீபா​ராதனை நடந்​தது.

பின்​னர் ராஜகோபுரம் அருகே தயார் நிலை​யில் இருந்த திருத்​தேரில் முருக பெரு​மான் எழுந்​தருளி​னார். பக்​தர்​கள் நீண்ட வரிசை​யில் நின்​று, ‘கந்​தனுக்கு அரோக​ரா, முரு​க​னுக்கு அரோக​ரா’ என்று பக்தி கோஷங்​கள் முழங்க தேரைவடம் பிடித்து இழுத்தனர். அலங்​கரிக்​கப்​பட்ட தேர் முக்​கிய மாட​வீ​தி​கள் வழி​யாக வலம் வந்து, ஆற்​காடு சாலையை கடந்து பின்​னர் பாது​காப்​பாக மீண்டும் கோயிலை வந்​தடைந்​தது.

இதற்​கிடையே பக்​தர்​களின் வசதிக்​காக பல்​வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்​யப்​பட்​டிருந்​ததுடன், அசம்​பா​விதங்​கள் ஏதுமின்றி திரு​விழா நடை​பெறு​வதை உறு​தி​செய்ய ஏராள​மான காவல்​துறை​யினர் பாது​காப்பு பணி​யில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பக்​தர்​களுக்கு கோயில் நிர்​வாகம் சார்பில் பிரசாதம் வழங்​கப்​பட்​டது.

இதையடுத்​து, இரவு ஒய்​யாளி உற்​சவம் நடை​பெற்​றது. தொடர்ந்து குதிரை வாகன புறப்​பாடு இன்று (மே 28) நடை​பெறும் நிலை​யில், நாளை (மே 29) இரவு 7 மணிக்கு வடபழனி ஆண்​ட​வர் வீதி உலா வந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலிக்​க​வுள்​ளார். மே 30-ம் தேதி காலை வள்​ளி, தேவசேனா சமேத சண்​முகர் வீதி உலா நடை​பெற இருக்​கிறது. பின்​னர் தீர்த்​த​வாரி உற்​சவ​மும், கலசாபிஷேக​மும் நடை​பெறுகின்​றன.

தொடர்ந்து அன்று இரவு 7 மணிக்கு திருக்​கல்​யாண உற்​சவம், மயில் வாக​னத்​தில் எழுந்​தருளி சுவாமி புறப்​பாடு நடை​பெறும். சுப்​பிரமணிய சுவாமி வீதி உலாவை தொடர்ந்​து கொடியிறக்கத்துடன்​ பிரம்​மோற்​சவ விழா நிறைவுபெற உள்ளது.

Spread the love