கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்.பி. மஹுவா மொய்த்ரா எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “எச்சரிக்கை! பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்குச் சென்றேன். விமானத்தில் 4 முதல் 6 ஆண்கள் என்னைக் கேலியாகப் பார்த்தபடி சென்றனர். விமானம் தரையிறங்கி கதவுகள் திறப்பதற்கு முன் அவர்கள் செய்த செயல் இதுதான் (வீடியோவைப் பகிர்ந்துள்ளார்). இது ‘மக்களின் கோபம்’ அல்ல. இது துன்புறுத்தல் மற்றும் எனது பாதுகாப்பை மீறும் செயல்’’ என கூறியுள்ளார்.
மொய்த்ரா பகிர்ந்துள்ள வீடியோவில் பல ஆண்கள் ‘ஜெய் ராம்’, ‘சோர் சோர் டிஎம்சி சோர்’ (டிஎம்சி திருடர்களின் கட்சி) மற்றும் மம்தா பானர்ஜி மற்றும் அபிஷேக் பானர்ஜியைக் குறிக்கும் வகையில் ‘பிஷி சோர், பைப்போ சோர்’ (அத்தையும் மருமகனும் திருடர்கள்) போன்ற முழக்கங்களை எழுப்புவதைக் கேட்க முடிகிறது. மேலும், ‘திரிணமூல் காங்கிரஸில் இருப்பவர்கள் அனைவரும் திருடர்கள் என்றும் அவர்கள் முழக்கமிட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் இண்டிகோ நிறுவனம், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு மற்றும் பிறரை டேக் செய்துள்ள மொய்த்ரா, சம்பந்தப்பட்ட பயணிகளைக் கண்டறிந்து, அவர்கள் விமானத்தில் பறக்க தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

More Stories
ராணுவ முகாமை தகர்க்கும் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ சதி முறியடிப்பு: 11 ஆதரவாளர்கள் கைது
இந்தியா – யுஏஇ இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்
பிஹார் அமைச்சரவை விரிவாக்கம்: நிதிஷ் குமார் மகன் நிஷாந்த் உட்பட 32 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பு