
சென்னை: விஷப்பூச்சி கடித்து 3-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உள்ள பள்ளி வளாகத்தில் விஷப்பாம்பு கடித்து மாணவர் உயிரிழந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் அரசுப் பள்ளியில் விஷப்பூச்சி கடித்து 3-ம் வகுப்பு மாணவி உயிரிழந்ததாக வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
இதற்கிடையே, கள்ளக்குறிச்சி கீழத்தேனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை மாணவர்களை வைத்து சுத்தம் செய்த தகவலும் வெளிவந்துள்ளது. அரசுப் பள்ளிகள் நலனில் திமுக அரசு கவனம் செலுத்தவில்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்: அரசுப் பள்ளிகளில் விஷப்பூச்சிக்கும், பாம்புக்கும் இரு மாணவர்களை இழந்த ரணம் ஆறும் முன்பே, கள்ளக்குறிச்சி கீழத்தேனூர் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பின்றி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி சுத்தம் செய்யும் காணொலி வெளியாகியிருக்கிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: அரசுப் பள்ளிகளில் பாதுகாப்பான சூழலுக்கு தொடர் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தவறிவிட்டது
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: அரசுப் பள்ளிகளுக்குள் பாம்புகள், விஷப்பூச்சி போன்றவை நுழைந்திருப்பது, அப்பள்ளிகளில் நிலவும் சுகாதாரமற்ற சூழலை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

More Stories
ஊராட்சி செயலாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்
“ரூ.1500 கோடி லஞ்சம்… மனமகிழ் மன்ற உரிமம் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை” – அன்புமணி
கடல் நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமானப் பணி: அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு