ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதலில் ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் பரினாஸ் தலிவால், அனந்த்ஜீத் சிங் நருகா ஜோடி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தது.
ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவு தகுதி சுற்றில் இந்தியாவின் பரினாஸ் தலிவால், அனந்த்ஜீத் சிங் நருகா ஜோடி 138 புள்ளிகளை குவித்து 4-வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கத்தார் 145 புள்ளிகளுடன் முதலிடமும், தென் கொரியா (143) 2-வது இடமும், சீனா (140) 3-வது இடமும் பிடித்தன.
இந்த 4 அணிகளும் இறுதிப் போட்டியில் மோதின. தகுதிச்சுற்றில் ஆதிக்கம் செலுத்திய கத்தார் அணியின் ராஷித் சாலி, ரீமாகானம் ஜோடி இறுதிப் போட்டியில் தலா 12 ஷாட்களில் தடுமாறியதால் வெளியேறினர். இந்த ஜோடியின் வெளியேற்றம் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை உறுதிசெய்ததுடன், பதக்கத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கியது.
சீனா 23 இலக்குகளையும், தென் கொரியா 22 இலக்குகளையும், இந்தியா 21 இலக்குகளையும் தாக்கியது. தொடர்ந்து 2-வது சுற்றில் இந்தியா 23 இலக்குளை தாக்கியது. இதனால் இந்திய ஜோடியின் சராசரி 44 ஆக உயர்ந்தது. ஆனால் சீனா ஒட்டுமொத்தமாக 52 இலக்குகளையும், தென் கொரியா 51 இலக்குகளையும் தாக்கி முறையே தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்றன.
இந்தியாவின் பரினாஸ் தலிவால், அனந்த்ஜீத் சிங் நருகா ஜோடி 44 இலக்குளை தாக்கி 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றது. ஆசிய விளையாட்டில் ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா பதக்கம் கைப்பற்றுவது இதுவே முதன்முறையாகும். இந்தியா நேற்று முன்தினம் ஸ்கீட் அணிகள் பிரிவில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றிருந்தது. இதில் மகளிர் பிரிவில் பரினாஸ் தலிவாலும் இடம் பெற்றிருந்தார்.

More Stories
ஆசிய விளையாட்டு போட்டி: வுஷுவில் வெள்ளி வென்றார் ரோஷிபினா தேவி
படகு போட்டியில் இந்திய ஜோடிக்கு வெண்கலப் பதக்கம்
ஆசிய விளையாட்டு போட்டி: 4X400 மீ. கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்றது இந்திய அணி