ஹைதராபாத்: சர்வாதிகாரி ஹிட்லரிடம் இருந்து உத்வேகம் பெற்றேன் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரின் நாஜி படையில் ஹைட்ரா என்ற ரகசிய அறிவியல் பிரிவு செயல்பட்டது. இந்த பிரிவு பல்வேறு கொடூரங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது: ஹிட்லரின் ஹைட்ரா அமைப்பு, யாரை வேண்டுமானாலும் படுகொலை செய்யும் திறன் கொண்டதாக இருந்தது. ஹிட்லரிடம் இருந்து பெற்ற உத்வேகத்தால் தெலங்கானா அரசின் பேரிடர் மீட்பு, பாதுகாப்பு அமைப்புக்கு ஹைட்ரா என்று பெயர் சூட்டினேன்.
இந்த ஹைட்ரா அமைப்பு, ஹைதராபாத்தில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறது. தெலங்கானாவின் ஹைட்ரா திட்டத்தை மும்பை, சென்னை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட நகரங்களிலும் பின்பற்றலாம். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதால் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்ள முடியும். இவ்வாறு முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசினார்.
இது குறித்து மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான கிஷன் ரெட்டி சமூக வலை தளத்தில் வெளியிட்ட பதிவில், “காங்கிரஸ் கட்சி ஹிட்லரை போன்றது. அந்த கட்சியின் அவசர நிலை மனப்பான்மை மீண்டும் வெளிப்பட்டு உள்ளது. ராகுல் காந்தி பாணியில் ரேவந்த் ரெட்டியும் பேசுகிறார்” என்று தெரிவித்துள்ளார். தெலங்கானாவின் பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான பிஆர்எஸ் கட்சியின் தலைவர்களும் முதல்வர் ரேவந்த் ரெட்டியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

More Stories
நார்வே செஸ் 2026 வெற்றி: பிரக்ஞானந்தாவுக்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை
தடம் மாறிய அரசியலும் தனிக்கட்சி தொடங்கிய தலைவர்களும்!
இந்திய பெண் ராணுவ அதிகாரிக்கு ஐ.நா. விருது: பிரதமர் மோடி வாழ்த்து