April 5, 2026

₹180 கோடி இமாலய மோசடி : எவரெஸ்டில் சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து கோடிகள்குவித்த கும்பல்…

Rescue red helicopter and Himalaya mountain range, Annapurna basecamp trekking trail, Nepal

APR 3, 2026 
எவரெஸ்டில் ட்ரெக்கிங் செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து சுமார்
$20 மில்லியன் (₹180 கோடி) காப்பீட்டு மோசடி நடந்ததாக காவல்துறை மேற்கொண்ட
விசாரணையில் தெரியவந்ததை அடுத்து நேபாள நாட்டின் சுற்றுலா துறை மிகப் பெரிய
சர்ச்சையில் சிக்கியுள்ளது.
சில ட்ரெக்கிங் வழிகாட்டிகள், ஏஜென்சிகள், ஹெலிகாப்டர் நிறுவனங்கள் மற்றும்
மருத்துவ பணியாளர்கள் இணைந்து இந்த மோசடியை நடத்தியுள்ளதாக
காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளின் உணவில் பேக்கிங் சோடா போன்ற பொருட்களை கலந்து,
உயரமான இடங்களில் ஏற்படும் “அல்டிட்யூட் சிக்க்னஸ்” போல தோன்றும், வாந்தி,
மயக்கம் போன்ற உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
உடல்நலம் பாதிக்கப்பட்ட பயணிகளை அவசர ஹெலிகாப்டர் மூலம் கீழே கொண்டு
செல்ல வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து, தேவையற்ற மீட்பு நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளனர்.
பின்னர் தங்கள் வலையமைப்பில் இணைந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட
நோயாளிக்கு பரிசோதனைகள் மேற்கொண்டு தவறான அல்லது மிகைப்படுத்தப்பட்ட
நோயறிதல்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த முறையில் போலியான மருத்துவ அறிக்கைகள், ஹெலிகாப்டர் செலவினங்கள்
மற்றும் போலி பில்கள் தயாரித்து காப்பீட்டு நிறுவனங்களிடம் பணம் பெற்றுள்ளனர்.
இதன் மூலம் சுமார் $19.69 மில்லியன் தொகை மோசடி செய்யப்பட்டதாக
விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக 32 பேர் மீது நேபாள அதிகாரிகள் வழக்கு பதிவு
செய்துள்ளனர். இதில் ட்ரெக்கிங் நிறுவன உரிமையாளர்கள், வழிகாட்டிகள்,
ஹெலிகாப்டர் ஆபரேட்டர்கள் மற்றும் மருத்துவர்கள் அடங்குவர்.
எவரெஸ்ட் பகுதியில் ஹெலிகாப்டர் மீட்பு மிகவும் அவசியமானதாய் இருந்தாலும்,
அதன் அதிக செலவு மற்றும் அவசரத் தன்மை காரணமாக சரிபார்ப்பு குறைவாக
இருப்பது இந்த மோசடிக்கு வழிவகுத்துள்ளது.
இந்த சம்பவம் சுற்றுலா பயணிகளின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என அச்சம்
எழுந்துள்ளது. நேபாளத்தின் பொருளாதாரத்தில் சுற்றுலா முக்கிய பங்கு வகிப்பதால்,
இதன் தாக்கம் பெரிதாக இருக்கலாம்.
மேலும் இந்த வழக்கு, எவரெஸ்ட் ட்ரெக்கிங் துறையில் அதிக வர்த்தகமயமாக்கல்,
கட்டுப்பாடுகள் குறைவு போன்ற பிரச்சனைகளையும் வெளிப்படுத்தியுள்ளது.
தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று
வருகின்றன. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் முன்வர வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.

Spread the love