திப்ரூகர்: அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, முதற்கட்டமாக, தலா ரூ.75 ஆயிரம் இடைக்கால நிவராணத் தொகையை மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வழங்கினார். அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், சிவசாகர் என்ற மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் கடந்த ஞாயிறன்று வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, மாநிலம் முழுவதும் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. எனினும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 1.80 லட்சத்தில் இருந்து 1.36 லட்சமாக குறைந்துள்ளது.
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிவசாகர், சராய்தியோ, ஜோர்ஹாட் மற்றும் கோலகாட் ஆகிய மாவட்டங்களில் உள்ள பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு முதற்கட்டமாக தலா ரூ.15 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்படுகிறது. பிற உதவிகள் உட்பட மொத்தம் ரூ.75 ஆயிரம் நிவாரணத் தொகையாக ஒரு குடும்பத்துக்கு வழங்கப்படும்.
முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், திப்ரூகரில் இந்த நிவாரண உதவிகளை வழங்கினார். சிவசாகர் மாவட்டத்தில் 55,000-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்ததாக, சராய்தியோ மாவட்டத்தில் சுமார் 40,000 பேரும், ஜோர்ஹாட் மாவட்டத்தில் 22,000-க்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா சிவசாகர் மாவட்டத்துக்குச் சென்று நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளை ஆய்வு செய்ய உள்ளார். அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளார். மாநில அரசு 5 மாவட்டங்களில் 54 நிவாரண முகாம்களை அமைத்துள்ளது. அதில், 13,771 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, 15,422 ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

More Stories
‘நாங்கள் ஏழையாக வாழ வேண்டுமா?’ – பிஹார் எம்எல்ஏ மைதிலிக்கு ஆதரவாக கங்கனா கேள்வி
திருப்பதி பிரம்மோற்சவ விழா சர்வ தரிசனத்துக்கு 8 கி.மீ. தூரம் நடக்க வேண்டுமா? – பக்தர்கள் அதிருப்தி
‘பிரதமர், அவரது தாய் குறித்த பேச்சு தரக்குறைவானது’ – ராகுல் காந்திக்கு பாஜக மூத்த தலைவர்கள் கண்டனம்