July 6, 2026

அதிமுக டூ தவெக: டேமேஜ் ஆகிறதா விஜய் இமேஜ்? எடப்பாடி பழனிசாமியின் சைலண்ட் கேம் பின்னணி

அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து தவெகவிற்கு நகர்ந்து வரும் தலைவர்களால் அக்கட்சி தலைமைக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேசமயம் விஜய்க்கு தமிழக மக்கள் மத்தியில் கிடைத்துள்ள கிளீன் இமேஜ் பாதிக்கப்படும் சூழல் காணப்படுகிறது. இது எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக மாறுமா? என விரிவாக அலசலாம்.

அதிமுகவிற்கு தொடர் தோல்விகள். எடப்பாடி பழனிசாமி சர்வாதிகார போக்கில் செயல்படுகிறார். இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்து அக்கட்சியில் இருந்து வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்தில் பலரும் இணைந்து வருகின்றனர். அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கை ஏன் ஏற்படவில்லை என்ற கேள்வி பலருக்கும் எழக்கூடும். அதற்கு முக்கிய காரணம் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள். இதுவரை இருமுனை போட்டியாக இருந்த அரசியல் களம், சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலை அடுத்து மும்முனை களமாக மாறியுள்ளது.

தவெகவிற்கு தாவும் முடிவு ஏன்?

தவெக, திமுக, அதிமுக என மூன்று கட்சிகள் ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளன. இருப்பினும் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற எண்ணம் அக்கட்சியை சேர்ந்த பலருக்கு குறைந்துவிட்டது. அடுத்த தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் திமுகவிற்கு தான் வாய்ப்புகள் அதிகம் எனக் கருதுகின்றனர். எனவே தான் தங்களது அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அதிமுகவிற்கு இனி எதிர்காலம் இல்லை எனக் கருதி தவெகவிற்கு தாவும் முடிவை எடுத்து வருகின்றனர்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்பது உடைபடும் தவெக தலைவர் விஜய்யின் தூய சக்தி பிம்பம்.

எதற்கும் அசராத EPS…அதிமுகவில் அடுத்தது என்ன?

திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி

  • தேர்தல் பரப்புரையின் போது திமுகவை தீய சக்தி என விமர்சித்த விஜய், தவெகவை தூய சக்தி என அடையாளப்படுத்தி கொண்டார்.
  • இந்த பரப்புரை மக்கள் மனதில் எளிதில் பதியும் வண்ணம் வியூகங்களை வகுத்தனர். சமூக வலைதளங்கள் வாயிலாக தொடர்ச்சியாக கருத்துகளை பரப்பினர். அதற்கு நல்ல பலன் கிடைத்து, தற்போது ஆட்சி கட்டிலும் பரிசாக கிடைத்திருக்கிறது.
  • ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் சரி, பின்பும் சரி. விஜய் அடிக்கடி சொல்லும் விஷயம் ஊழலற்ற நேர்மையான வெளிப்படையான ஆட்சியை மக்களுக்கு வழங்குவேன் என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.
  • ஆனால் அதிமுகவில் இருந்து செல்பவர்களில் பலர் ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்கள். தற்போது வரை குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனினும், வழக்கு விசாரணையின் முடிவு எதிர்மறையாக செல்வதற்கும் வாய்ப்புகள் உண்டு.
  • இன்னும் சொல்லப் போனால் தற்போதே எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
  • உதாரணமாக தவெகவில் இணைந்த சி. விஜயபாஸ்கர், எம். ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது முறைகேடுகள் தொடர்பாக ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதற்கு முதலமைச்சர் விஜய் என்ன சொல்லப் போகிறார்? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

TOI அருண் ராம் சொன்ன வரலாற்று உதாரணம்

ஒருவேளை இருபெரும் திராவிடக் கட்சிகள் செய்யவில்லையா? எனக் கேள்விகள் கேட்டு திசை திருப்பவும் வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சியினரை தக்க வைக்க அதிரடியான வியூகங்கள் ஏதும் வகுக்காமல் சைலண்ட் மோடில் இருப்பது தான் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது. இந்த இடத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி ஆசிரியர் அருண் ராம் சொன்ன விஷயங்கள் கவனம் பெறுகின்றன. வாக்குப்பதிவில் தவெகவை எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்காமல் இருக்கலாம். ஆனால் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், எம். எல். ஏக்கள், நிர்வாகிகளுக்கு வழிவிட்டு தவெகவிற்குள் நுழைய வைத்து, அக்கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும் வேலையை மறைமுகமாக செய்து கொண்டிருக்கிறார் எனவும் புரிந்து கொள்ளலாம்.

ட்ராய் நகரில் ஊடுருவும் மரக் குதிரை பொம்மை

இதற்கு உதாரணமாக கிரேக்க இதிகாசத்தில் இருந்து உதாரணம் ஒன்றையும் சுட்டிக் காட்டியுள்ளார். 10 ஆண்டுகால தொடர்ச்சியான போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ட்ராய் நகருக்கு மரக் குதிரை ஒன்றை பரிசாக வழங்குவர். ஏனெனில் பலம் வாய்ந்த ட்ராய் நகரின் பிரம்மாண்ட கோட்டை சுவர்களை தாண்டி கிரேக்கர்களால் உள்ளே நுழைய முடியாது. எனவே நேருக்கு நேர் வெற்றி பெற முடியாது என்று கருதி, இந்த திட்ட்த்தை செயல்படுத்துவர். அந்த குதிரைக்குள் கிரேக்க வீரர்கள் நுழைந்து கொண்டு உள்ளே செல்வர்.

எடப்பாடி பழனிசாமி பிளான் இதுதானா?

ட்ராய் நகர மக்கள் அசந்த நேரம் பார்த்து கிரேக்க வீரர்கள் வெளியே வந்து போர் தொடுத்து வெற்றி பெறுவர். இதேபோல் எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்திருக்கிறார் எனச் சொல்ல முடியாது. அதேசமயம் அதிமுகவில் இருந்து செல்பவர்களால் கடைசியில் தவெகவிற்கு தான் சிக்கல் ஏற்படும். அதன் தூய, நேர்மையான, வெளிப்படையான ஆட்சி என்ற பிம்பம் உடைபடும். அதற்கு மாஸ்டர் மைண்டாக எடப்பாடி பழனிசாமியை திரும்பி பார்க்கும் நிலை வரலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Spread the love