ஜம்மு: தெற்கு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமர்நாத் குகைக் கோயில் அமைந்துள்ளது. இந்துக்களின் புனிதத் தலங்களில் ஒன்றான இக்கோயில் கடல் மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பாரம்பரியான 48 கி.மீ. தூர நுன்வான்-பஹல்காம் வழித்தடம் மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள குறுகிய ஆனால் செங்குத்தான 14 கி.மீ. தூரபல்தால் வழித்தடம் மூலமாக இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை பஹல்காம், பல்தால் அடிவார முகாம்களில் இருந்து இன்று ஒரே நேரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 57 நாட்கள் நீடிக்கும் இந்த யாத்திரை ஆகஸ்ட் 28-ம் தேதி நிறைவடைய உள்ளது. இந்நிலையில் பஹல்காம், பல்தால் ஆகிய 2 முகாம்களை நோக்கி ஜம்மு பகவதி நகர் யாத்ரி நிவாஸில் இருந்து முதல் பக்தர்கள் குழு நேற்று புறப்பட்டது. இவர்களின் பயணத்தை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக பகவதி நகர் யாத்ரி நிவாஸில் சின்ஹா சிறப்பு பூஜைகளை மேற்கொண்டார்.
ஹர் ஹர் மகாதேவ் உள்ளிட்ட பக்தி முழக்கங்களுக்கு மத்தியில், 4,800-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்கு 3.90 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் ஜம்முவுக்கு நேரடியாக வந்து பதிவு செய்யும் வசதியும் தொடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு முகமைகள் செய்துள்ள பயண ஏற்பாடுகள் குறித்து பக்தர்கள் தங்களது திருப்தியை வெளிப்படுத்தினர்.

More Stories
டெல்லியில் முதல் முறையாக நிலத்தடி கட்டுப்பாட்டு மையம்
ராமர் கோயிலில் திருடப்பட்ட காணிக்கைகளை மீட்க தீவிரம்: புல்டோசர் நடவடிக்கை எடுக்க உ.பி. அரசு முடிவு
இந்தியா – ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து: ரூ.35,000 கோடியில் கார் தொழிற்சாலை